நிவேதிதை அம்மையார்
******** (28 அக்டோபர் 1867 — 13 அக்டோபர் 2011) ********
ஒரு பக்தி மிகுந்த குடும்பத்தில் அயர்லாந்து நாட்டில் பிறந்தவர் மார்கரெட் (நிவேதிதா) தன்னுடைய பத்தாவது வயதில் தந்தையாரை இழந்தார். மிகுந்த போராட்டங்களுக்கிடையே சிறப்பான கல்வி பயின்று ஆசிரியை ஆனார். சிறந்த சொற்பொழிவாளரும் எழுத்தாளரும் கூட.
சுவாமி விவேகானந்தரின் உரைகளை கேட்கின்ற வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தது. அவை மார்கரெட்டை மிகவும் கவர்ந்தது. சுவாமி விவேகானந்தரின் கூட்டத்திலும், கலந்துரையாடலிலும் பங்கேற்றார். தன்னுடைய பிறப்பு ஆன்மீகத்திற்கானது என்று உணர்ந்தாள்.
ஒருமுறை விவேகானந்தர் மார்க்கெரட்டிடம் “என் நாட்டுப் பெண்களுக்கு கல்வி அறிவு விழிப்புணர்வு ஏற்படுத்த விழைகிறேன் உன்னுடைய ஒத்துழைப்பு கிடைத்தால் மகத்தானதாக இருக்கும் ” என்று கூறினார். உடனே அவர் சற்றும் யோசிக்காமல் இந்திய திரு நாட்டிற்கு வந்தார் பேலூர் ராமகிருஷ்ணா மடத்தில் ஆன்மீக பயிற்சி பெற்றார் அங்கு தான் மார்கெரட்..
நிவேதிதா என்று துறவிகளால் அழைக்கப்பெற்று மார்கரெட் “நிவேதிதா” வாக மாறினார். துறவிகளின் தியான பயிற்சி இசை நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் பங்கேற்றார். ஒரு நாள் சுவாமி விவேகானந்தர் புனித கங்கையின் எதிர் கரையை காண்பித்து அங்கேதான் ஒரு கான்வென்ட் பள்ளி நிறுவ உள்ளோம் பறவைகள் பறப்பதற்கு உதவும் இரு புறம் உள்ள சிறகை போல இந்தியாவிற்கு படித்த ஆண்களும் பெண்களும் தேவைப்படுகின்றனர் என்றார். கேட்ட மாத்திரத்திலேயே சகோதரி நிவேதிதா களத்தில் குதித்தார் குறைந்த நிதி வசதிகளிலும் முதலில் பெண்களுக்கான கல்வி கூடத்தை தொடங்கினார். அன்றைய காலகட்டத்தில் வெகுவாக, பெண்கள் பள்ளிகளுக்கு அனுப்பப்படுவது இல்லை. பல தடைகளையும் இன்னல்களையும் எதிர்கொள்ள நேர்ந்தது. நிதி திரட்டுவதற்காக அந்நிய நாடுகளுக்கு அவர் பயணம் மேற்கொண்டார். அவர்களின் உதவியை நாடினார். மீண்டும் இந்தியா திரும்பி ஆன்மீக தத்துவங்களையும், வாழ்வியல் வழிபாட்டு முறைகளையும், இந்தியா முழுவதும் சுற்றி ஆய்ந்தறிந்தார்.
பல தடைகளை தகர்த்தெறிந்து, ஏமாற்றங்களை கடந்து , அவர் உள்ளத்தில் மட்டும் இவ்விழுமியங்கள் கொழுந்துவிட்டு எரிந்தன. பள்ளியை சிறப்புற நடத்துவதில் கவனம் செலுத்தி, பெண்களின் முன்னேற்றத்திற்கான ஒளி விளக்காய் திகழ்ந்தார்.
சகோதரி நிவேதிதையும் சுப்ரமணிய பாரதியும் சந்தித்த தருணம். பாரதி, 1905- இல் தாதா பாய் நௌரோஜி தலைமையில், இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டத்தில் கலந்துகொண்டு திரும்புகையில் அவருக்கு விவேகானந்தரின் ஆன்மீக வாரிசான சிறந்த தத்துவ சிந்தனையாளர், சகோதரி நிவேதிதையின் அறிமுகம் கிடைக்கப்பெற்றது. நிவேதிதையின் சந்திப்பு பாரதிக்கு பெரும் மகிழ்ச்சியை தந்தது ஒளி படைத்த கண்களும் பராசக்தியின் பூரண அருள் பெற்றவராகவும் தோற்றமளித்தார் நிவேதிதா. அந்த நாள் சுப்ரமணிய பாரதியின் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அந்த நிகழ்வை தெரிந்து கொள்ளுங்கள். நிவேதிதை பாரதியை சந்தித்த முதல் சந்திப்பில் பாரதியை நோக்கி ‘மகனே’! “திருமணம் ஆகிவிட்டதா? “என்று கேட்டார். பாரதியும் “தாயே! எனக்கு திருமணம் ஆகி இரண்டு வயதில் பெண் குழந்தை ஒன்று இருக்கிறது” என்றார்.
மகிழ்ச்சி அடைந்த நிவேதிதை உன் மனைவியை அழைத்து வரவில்லையா? என்று கேட்டார் அதற்கு பாரதி, மனைவியை சரிசமமாக பொது இடங்களுக்கு அழைத்துச் செல்லும் வழக்கம் எங்களில் இல்லை. மேலும் மனைவியை காங்கிரஸ் கூட்டத்திற்கு அழைத்து வருவதால் என்ன பயன் என்று கேட்டார். இதைக் கேட்ட அம்மையாருக்கு கோபம் வந்துவிட்டது.” ஆண்கள் பெரும்பாலும் படித்திருந்தும் அறியாமையில் மூழ்கி சுயநலமிகளாக வாழ்கின்றனர். பெண்களை அடிமை என கருதுகின்றனர். பெண்களுக்கு சம உரிமையும், தகுந்த கல்வியும் மறுக்கப்பட்டால் எப்படி நாடு சமூக சீர்திருத்தம் அடையும்?” என்று தாயுள்ளத்துடன் கடிந்து கொண்டார். தலைகுனிந்த பாரதியை நிவேதிதா, “இனிமேலாவது அவளை வேறு என்று நினைக்காமல் உன் சொந்தக்கரம் என மதித்து மனதில் அவளை தெய்வம் என போற்றிடல் வேண்டும்” என்றார். அன்று முதல் சகோதரி நிவேதிதையை, தன் ஞான குருவாக பாரதி ஏற்றார். தமிழகத்திற்கென நிவேதிதை வழங்கிய பெரும் குறியீடு. பெண் விடுதலைக்கும் ஜாதி மறுப்பிற்கும் தன் கவிதைகளால் புரட்சிக்கனல் ஊட்டிய சுப்பிரமணிய பாரதி எனலாம். ஆம்! சகோதரி நிவேதிதா பாரதிக்கு குருவாக தெரிந்தார். “இந்தியா” என்ற இதழில் யானையும் யானை கூட்டமும் என்ற தலைப்பில், சகோதரி நிவேதிதை எழுதிய கட்டுரை ஒன்று பிரசுரமானது. தனியாக உள்ள யானையை நாம் எளிதில் வெற்றி பெற முடியும் ஆனால் யானைக் கூட்டத்தையே வெல்லும் மனிதர்கள் உண்டோ? என்ற வினாவின் மூலம் இந்த நாட்டிலே பெரும்பான்மையான மக்கள் ஒரே சிந்தனையில் உழைக்க எத்தனித்தால், அவர்களுக்கு எல்லையற்ற உறுதி ஏற்பட்டு விடுகிறது. அவர்களை எதிர்க்க எவராலும் முடியாது. இந்தியாவில் இன்றைக்கு நாம் ஒற்றுமையை ஏற்படுத்த தவறினால், என்றைக்கும் அதை எவராலும் செய்ய இயலாது. ஒரு உடலை எப்படி இரண்டு கூறாக பிரிக்க முடியாதோ அவ்வாறு இந்தியாவை வடக்கு, தெற்கு என்று பிரிக்க முடியாது.
நம்மில் ஒற்றுமை இல்லை உறுதி இல்லை என்ற எதிர்மறை சிந்தனை பேசுபவர்களை கடந்து இந்தியாவிற்கு புதிய நம்பிக்கையை கொடுக்க வேண்டும் என்றார் சகோதரி நிவேதிதை. அதன் பின்னர்தான் “புதுமைப் பெண், பெண்மை வாழ்க, பெண்கள் விடுதலை கும்மி “போன்ற பாடல்களை படைத்தான் பாரதி. பெண்களை உயர்த்தாவிட்டால் ஆண்கள் உயர முடியாது என்றார்.
ஒரு செயல்திட்டமாக சமூகத்திற்கு சில வழிகாட்டுதல் நெறிகளை விதித்தார் பாரதி.
*வயது நிரம்பாத சிறுமிகளுக்கு திருமணம் செய்வித்தல் கூடாது!
*தனக்கு விருப்பம் இல்லா ஒருவனை திருமணம் செய்ய வற்புறுத்தல் ஆகாது!
*மனைவிக்கு கணவனை, உரிய காரணங்கள் இருக்குமாயின் பிரிந்து வாழ்வதற்கான சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும்!
*மூதாதையர் சொத்தில் சம உரிமை அளிக்கப்பட வேண்டும்!
*கைம் பெண் மறுமணம் தடுத்தல் கூடாது!
*திருமண வாழ்வில் விருப்பம் இல்லை என்றாலும் உழைத்து தொழில் செய்யும் உரிமை தரப்பட வேண்டும்!
*தகுதியின் அடிப்படையில் அவர்களுக்கு அரசு பணிகளிலும் அலுவலகங்களிலும் பணி செய்ய உரிமை தரப்பட வேண்டும்!
*ஆட்சி அதிகாரத்திலும் சம வாய்ப்பு நல்க வேண்டும்!
இவ்வாறாக பெண் உரிமை கோட்பாடுகளை வலியுறுத்தி புரட்சி பெண்களை காண விரும்பினார்.
M S R நித்தியானந்தம்