டெல்லியில் போலி அடையாள அட்டை வைத்துக் கொண்டு, தேச விரோச செயலில் ஈடுபட்டதாக சீன பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.
டெல்லியின் வடக்குப் பகுதியில் டிலா என்கிற இடத்தில் டெல்லி பல்கலைக்கழகம் அருகே திபெத்திய அகதிகளுக்கான காலனி இருக்கிறது. இந்த பகுதிக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். இப்பகுதியில் புத்த மத துறவி போல நடமாடி வந்திருக்கிறார் ஒரு பெண். அப்பெண்ணின் நடந்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தனது பெயர் டோல்மா லாமா என்று கூறியிருக்கிறார். தொடர் விசாரணையில், அதே பெயரில் அவரிடம் நேபாள நாட்டின் குடியுரிமை சான்றிதழ் இருந்தது.
இதை பறிமுதல் செய்த போலீஸார், வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலகத்திற்குச் சென்று அப்பெண் குறித்து விசாரணை நடத்தினார். அப்போதுதான் உண்மை அம்பலமானது. அதாவது, உண்மையில் அந்தப் பெண் சீன நாட்டின் ஹைனன் மாகாணத்தைச் சேர்ந்தவர். அவரது உண்மையான பெயர் கெயி ரூயோ என்பது தெரியவந்தது. கடந்த 2019-ம் ஆண்டு சுற்றுலா விசாவில் இந்தியா வந்தவர், அதன் பிறகு தனது நாட்டிற்குத் திரும்பிச் செல்லவில்லை. இதையடுத்து, அப்பெண் மீது தேச விரோத செயலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி போலீஸார் கைது செய்தனர்.