ஈரானில் ஹிஜாப்புக்கு எதிராக போராடி வரும் பெண்களுக்கு ஆதரவாக கேரள மாநிலத்திலுள்ள இஸ்லாமிய பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இஸ்லாமிய நாடான ஈரானில், 9 வயதுக்கு மேற்பட்ட பெண் குழந்தைகள் முதல் மூதாட்டி வரை அனைவரும் ஹிஜாப் அணிய வேண்டும் என்பது சட்டமாக இருந்து வருகிறது. இதை கண்காணிக்க சிறப்பு போலீஸ் பிரிவும் உருவாக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் முறையாக ஹிஜாப் அணியாத பெண்களை தாக்குவது, அபராதம் விதிப்பது, சிறையில் அடைப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஈரான் அரசின் இத்தகைய செயலுக்கு அந்நாட்டுப் பெண்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். பெண்ணுரிமைப் போராளிகளும் அரசுக்கு எதிராக அவ்வப்போது போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், ஈரானின் குர்திஸ்தான் மகாணம் சஹிஸ் நகரைச் சேர்ந்த மாஷா அமினி என்கிற 22 வயது இளம்பெண், தலைநகர் தெஹ்ரானில் வசிக்கும் தனது உறவினரை பார்ப்பதற்காக தனது குடும்பத்தினருடன் கடந்த செப்டம்பர் 13-ம் தேதி காரில் வந்தார். அப்போது, அவர்களது காரை வழிமறித்த சிறப்பு பிரிவு போலீஸார், முறையாக ஹிஜாப் அணியாததாகக் கூறி, மாஷா அமினியை கைது செய்தனர். அப்போது, இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தினால், மாஷா அமினியை சிறப்பு போலீஸார் கண்மூடித்தனமாகத் தாக்கி இருக்கிறார்கள். மேலும், அவரை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று அங்கும் தாக்கி இருக்கிறார்கள். இதில், மாஷா அமினி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து, ஈரானில் பெண்கள் புரட்சி வெடித்தது. இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப்பை கழட்டி வீசியும், தீவைத்து எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தலைமுடி இருந்தால்தானே ஹிஜாப் அணிய வேண்டும் என்று சொல்லி, தலைமுடியை கத்தரித்து எறிந்தும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். குர்திஸ்தானில் தொடங்கிய இப்போராட்டம், நாடு முழுவதும் பரவி, ஈரானே அல்லோகலப்பட்டு வருகிறது. இப்போராட்டத்தில் 250-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகிறது. ஆனாலும், பெண்கள் போராட்டத்தைக் கைவிடுவதாக இல்லை. பெண்களுக்கு ஆதரவாக ஆண்களும் போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள். இதனால், ஈரானே போர்க்களம்போல் காட்சியளிக்கிறது. என்ன செய்வதெரியாமல் ஈரான் அரசு தவித்து வருகிறது.
இந்த நிலையில்தான், ஈரான் பெண்களுக்கு ஆதரவாக கேரளாவிலுள்ள இஸ்லாமிய பெண்களும் போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள். கேரள மாநிலம் கோழிக்கோட்டில் திரண்ட 50-க்கும் மேற்பட்ட பெண்கள் ஹிஜாப்பை தீவைத்து எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தின் போது பெண்களுக்கு ஆதரவாக ஆண்களும் கலந்துகொண்டனர். இந்த போராட்டத்தின்போது ஹிஜாப்புக்கு எதிராகவும், ஈரான் அடக்குமுறைக்கு எதிராகவும் பெண்களும், ஆண்களும் கோஷம் எழுப்பினர். இதன் தொடர்ச்சியாக, ஹிஜாப்புக்கு எதிரான போராட்டம் நாடு முழுவதும் தீவிரமடையும் என்று கூறப்படுகிறது.