மஹான் ரமண மகரிஷி

மஹான் ரமண மகரிஷி

Share it if you like it

இந்த பிரபஞ்சத்தின் மறைபொருளாக இருக்கும் “பேரமைதியின்” பொருள் உணர்த்தும் தட்சிணாமூர்த்தியின் அம்சமாய் இம்மண்ணில் தோன்றிய மஹான் ஸ்ரீ ரமண மகரிஷி.

மதுரை ஜில்லாவில் திருச்சுழி என்னும் சிற்றூரில், சுந்தரம் ஐயர் மற்றும் அழகம்மாளுக்கு ‘1879ல் டிசம்பர் ’30 இரண்டாவது மகனாக பிறந்தார். அவருக்கு வெங்கடராமன் என்று பெயர் வைத்தனர். உள்ளூர் பள்ளியில் படித்து வந்தார். தந்தையாரின் மறைவிற்குப் பின் ஐந்தாம் வகுப்பு திண்டுக்களிலும் பிறகு மதுரையிலும் படித்தார்.

மதுரையில் தன் மாமா வீட்டில் இருந்த ரமணர், ஒரு நாள் உறவினர் ஒருவர் வந்திருக்க அவரிடம் எங்கு இருந்து வருகிறீர்கள் என கேட்க, அவர் அருணாச்சலத்திலிருந்து வருகிறேன் என்றார். முதல் முறை அந்த வார்த்தையை கேட்ட மாத்திரத்தில் அவரின் உள்ளுணர்வு அதையே சிந்திக்க தொடங்கியது.

ஒருநாள் வெங்கடராமன் தனது வீட்டு மாடியில் உட்கார்ந்து கொண்டிருந்தார், உடலில் நோய் ஒன்றும் இல்லை. ஆனால் திடீரென்று தான் மரணத் தறுவாயில் இருப்பதாகத் தோன்றியது. தானே இதை எதிர் கொள்ளத் துணிந்தார். அதன் இறுதியில் இந்த உடம்பு வெறும் மாயையே இதனுள் இருக்கும் நான் என்பதே ஆத்மா என்ற தெளிவு பிறந்தது அவருக்கு. பின் படிப்பிலோ , விளையாட்டிலோ ஆர்வமில்லை. கண்ணை முடி தியானத்தில் அமர்வதால் ஓர் பேரமைதியை உணர தொடங்கி அதுவே அவரின் சுபாவமாக மாறியது. இத்தகைய மாற்றத்தால் உறவினரும், தன் அண்ணனும் அவரை கண்டிக்க தொடங்கினர். தான் முன்னதே கேட்டு அறிந்திருந்த அருணாச்சலத்தை காண வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்தார்.

1896 ஆம் ஆண்டில், வெங்கடராமன் தனது தந்தையாக கருதிய அருணாச்சலேஸ்வரரை தேடி தனது வீட்டை விட்டு வெளியேறினார். ஒரு சிறு தொகையை கையில் எடுத்து கொண்டு எதனை தொலைவில் உள்ளது என்பதுகூட அறியாது, நான்கு நாட்கள் பயணப்பட்டு திருவண்ணாமலை வைத்து சேர்ந்தார். அன்றிலிருந்து தனது இறுதி வரை, வெங்கடராமன் அருணாசலத்தை (திருவண்ணாமலை) விட்டு எங்கும் செல்லவில்லை. தன்னிடம் இருந்த மிச்ச பணம் மற்றும் ஆடையை கூட துறந்து, வெறும் கௌபீன தரியாய் இருந்தார்.

திருவண்ணாமலையை அடைந்த அவர், பல இடங்களில் அமர்ந்து தியானத்தில் ஈடுபடலானார். மனித நடமாட்டம் இல்லாத தனிமையை தேடி கடைசியில் பாதாளலிங்க அறையில் அமர்ந்து பல நாட்கள் அசைவின்றி தன் உடம்பை பூச்சியும், கரையானும் அரிப்பது கூட தெரியாமல் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். எப்படியோ ஊரார் அனைவர்க்கும் இந்த செய்தி பரவியது. பின் மஹான் ஸ்ரீ சேஷாத்திரி ஸ்வாமிகள் இவரை வெளியே கொண்டுவந்து காப்பாற்றினார். அந்த நிகழ்விற்கு பின் இவரை பிராமண சுவாமி என்றும், மௌன சுவாமி என்றும் மக்கள் அழைக்க தொடங்கினர்.

“நான் யார்” என்பதற்கு விடை காண்பதே இந்த பிறவியின் நோக்கம் என்று தொடர்ந்து தியான நிலையிலேயே இருக்க தொடங்கினர். அவரை பார்க்க பலதரப்பட்ட மக்கள் வர தொடங்கினர் . வருவோர் அனைவருக்கும் தன் பார்வையாலே அருளை வழங்கிக்கொண்டுஇருந்தார். “தன்னை தான் அறிதல் ” – இதுவே ஒருவர் உலகிற்கு செய்யக்கூடிய மிகப்பெரிய சேவை.
“மகிழ்ச்சி என்பதே நம் இயல்பு. அதை விரும்புவதில் தவறில்லை. உள்ளே இருக்கும்போது அதை வெளியே தேடுவதே தவறு” இது போன்ற பல தத்துவங்களை மித எளிமையாக விளக்கியுள்ளார்.

நம் தேசமட்டும் இல்லாமல் பல அயல்நாட்டுகாரர்களும் இவரை பார்க்க வந்தவண்ணம் இருந்தனர். தன்னை பார்க்க வருபவர் இடத்தில் எந்த வித விருப்பும் , வெறுப்பும் காட்டாமல் எல்லோரையும் சமமாக பாவித்தார். குறிப்பாக ‘1931 ல் பால் பிராண்டன் என்ற அயல் நாட்டுக்காரர் தான் எழுதிய புத்தகத்தில் தனக்கு தோன்றிய ஆன்மிக சந்தேகங்களையும் தன் பார்வையின் மூலமாகவே ரமண மகரிஷி தெளிவுபடுத்தியதையும், அவரை பார்த்தால் உன் சந்தேகங்களுக்கு விடைகிடைக்கும் என்று காஞ்சி மகாபெரியவர் அனுப்பிவைத்ததையும் மிக தெளிவாக விளக்கியுள்ளார் .

சில காலம் கழித்து அவரது அன்னையும், சகோதரரும் இவரிடமே வந்துவிட்டனர். வருபவருக்கு எல்லாம் சமைத்து தருவது அவரது அன்னையின் பணியாக இருந்தது. இவரோடு இருந்து அவர்களும் முக்தியடையும் நிலைக்கு தங்களை உயர்திக்கொண்டனர். தனது அன்னை காலமான அன்று எந்த ஒரு சலனமும் இன்றி இருந்தார். அவருக்கு அந்திம க்ரியையைகளை இவரின் சீடர்கள் முன்னின்று செய்தனர். இன்றும் அவரது அன்னையின் சமாதியில் மாத்ருபூதேஸ்வரர் என்ற பெயருடன் விளங்கும் சிவலிங்கத்திற்கு ஆராதனைகள் நடக்கிறது.

மலையை சுற்றியே தன் வாழ்நாள் முழுவதும் இருந்தார். அவர் உடலின் முழங்கைக்கு மேலே இடது கையில் வீரியம் மிக்க கட்டி இருப்பது கண்டறியப்பட்ட பின்னர் மகரிஷிக்கு நான்கு முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 1950 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி இரவு 8-47 மணிக்கு ஸ்ரீ ரமண மகரிஷி முக்தியடைந்தார். ஸ்ரீ ரமணா மகரிஷி அவர்கள் பல பக்தி பாடல்களை இயற்றினார் அதில் அக்ஷர மணமாலை குறிப்பிடத்தக்கது.

–திரு.சுந்தர்


Share it if you like it