தமிழக கோவில்களில் ஆன்மிக மரபு மீறல் உள்ளதாக தி.மு.க. அரசை வேதாந்தம் மிக கடுமையாக சாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு விஷ்வ ஹிந்து பரிஷத் நிறுவனத் தலைவர் எஸ். வேதாந்தம். இவர், ராமேஸ்வரத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது ;
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கிராம கோவில் பூஜாரிகளுக்கு மாதம், 2,000 ரூபாய் ஊக்கத் தொகை வழக்கப்படும் என தெரிவித்தது. எனினும், தி.மு.க. ஆட்சிக்கு வந்து ஓராண்டுக்கு மேலாகி விட்டது. இதுநாள், வரை தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் காற்றில் பறக்க விட்டது.
இக்கோரிக்கையை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மார்ச் -20ல் அனைத்து மாவட்ட தலை நகரத்திலும் கிராம கோவில் பூஜாரிகள் பேரவை சார்பில் உண்ணாவிரதம் நடக்க உள்ளது. ராமேஸ்வரம் உள்ளிட்ட ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் ஆன்மீகம், சமய கலாசாரம் தெரியாத அதிகாரிகளை நியமித்து இவர்கள் ஆன்மிக பெரியவர்களை கலந்து ஆலோசிக்காமல் ஆன்மிக மரபுகளை மீறி செயல்படுகின்றனர்.
இதனை தி.மு.க. அரசு கண்டு கொள்ளாமல் மதசார்பற்ற அரசு என கூறிக் கொண்டு ஹிந்துக்களுக்கு விரோதமாக செயல்படுகிறது. தி.மு.க. மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். கோவில் அதிகாரிகளுக்கு மூன்று மாதம் ஆன்மிக விதி குறித்த பயிற்சி அளிக்க வேண்டும் என பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இவ்வாறு பேசினார்.