இடைத்தேர்தல் நடக்கவிருக்கும் ஈரோடு கிழக்குத் தொகுதியில் குடியிக்கும் வாக்காளர்களுக்கு கறி விருந்து வைத்தும், இன்பச் சுற்றுலா அழைத்துச் சென்றும் தி.மு.க. தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிவருவது அம்பலமாகி இருக்கிறது.
ஈரோடு கிழக்குத் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இந்தவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மகன் திருமகன் ஈ.வெ.ரா. இவர், கடந்த ஜனவரி மாதம் 4-ம் தேதி, திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து, அத்தொகுதிக்கு பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதைத் தொடர்ந்து, திருமகன் ஈ.வெ.ரா.வின் தந்தை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை, அத்தொகுதியின் வேட்பாளராக தி.மு.க. அறிவித்தது. அ.தி.மு.க. தரப்பில் தென்னரசு என்பவர் போட்டியிடுகிறார். தவிர, நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகாவும், தே.மு.தி.க. சார்பில் ஆனந்த் என்பவரும் போட்டியிடுகின்றனர். அதோடு, சுயேட்சை வேட்பாளர்கள் பலரும் களத்தில் இருக்கிறார்கள்.
எனினும், இத்தொகுதியில் பிரதான கட்சிகள் இடையே 4 முனை போட்டி நிலவினாலும், பலப்பரிட்சை என்னவோ தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும்தான். தி.மு.க.வுக்கு ஆளும்கட்சி என்பதால் கவுரவப் பிரச்னை. அதேசமயம், இழந்த செல்வாக்கை மீட்க அ.தி.மு.க.வுக்கு வாழ்வா சாவா போராட்டம். நிலைமை இப்படி இருக்க, தி.மு.க., தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி வருவதாக ஆரம்பத்திலிருந்தே குற்றச்சாட்டுகள் நிலவி வருகின்றன. குறிப்பாக, தி.மு.க. தேர்தல் பணிமனை திறப்பு விழாவில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது தொடர்பாக அமைச்சர் கே.என்.நேருவும், வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் பேசிக்கொண்ட வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில்தான், தி.மு.க. தரப்பில் ஈரோடு கிழக்குத் தொகுதி வாக்காளர்களுக்கு ஏகப்பட்ட ஆஃபர்கள் வழங்கப்பட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. வாக்காளர்களுக்கு தலா 5,000 ரூபாய் ரொக்கமும், வீட்டுக்கு வீடு குக்கரும் தி.மு.க. வழங்கி வருகிறது என்கிற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இதை மெய்ப்பிக்கும் விதமாக, ஈரோடு கிழக்குத் தொகுதியில் வசிக்கும் பெண்கள் குக்கருடன் வலம் வருகிறார்கள். கேட்டால் கை சின்னத்துக்கு ஓட்டுப்போடச் சொல்லி கொடுத்தார்கள் என்று கூறுகிறார்கள். இதுகுறித்த வீடியோ காட்சியும் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
இவற்றை எல்லாம் தூக்கி சாப்பிடும் வகையில் இருக்கிறது தி.மு.க.வின் மற்றொரு ஆஃபர். அதாவது, கறி விருந்து வைப்பதாகவும், இன்பச் சுற்றுலா அழைத்துச் செல்வதாகவும் கூறி, ஈரோடு கிழக்குத் தொகுதியில் வசிக்கும் ஒரு குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த மக்களை தி.மு.க.வினர் பஸ்களில் அழைத்துச் செல்கிறார்கள். பின்னர், 2 நாட்கள் பல்வேறு இடங்களை சுற்றிக் காட்டும் தி.மு.க.வினர், 3 வேளையும் கறியும், சோறும் போட்டு வெயிட்டாக கவனித்து அனுப்புகிறார்கள். காலையில் கறிக்குழம்புடன் சுடச்சுட இட்லி, மதியம் மட்டன் பிரியாணியுடன், கோலா உருண்டை, மட்டன் சுக்கா, சிக்கன் வறுவல், கரண்டி முட்டை ஆம்லேட் என்று அமர்களப்படுத்துகிறார்களாம்.
இது அப்பட்டமான தேர்தல் நடத்தை விதி மீறல் என்றும், இதை தேர்தல் கமிஷன் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், ஏற்கெனவே, வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்கான டோக்கனை தி.மு.க. பிரமுகரின் காரில் இருந்து தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் கைப்பற்றிய நிலையில், அச்சம்பவம் தொடர்பாக இதுவரை தேர்தல் கமிஷன் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றச்சாட்டுகிறார்கள். இந்த சூழலில், ஈரோடு கிழக்குத் தொகுதியின் வாக்காளர்களை தி.மு.க. பிரமுகர்கள் இன்பச் சுற்றுலாவிற்காக பஸ்களில் அழைத்துச் செல்வது மற்றும் குக்கர் வழங்கியது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த பிறகாவது தேர்தல் கமிஷன் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என்று பார்ப்போம்.