காலிஸ்தானியர்களால் கலவர பூமியான அமிர்தசரஸ்: உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொலை மிரட்டல்!

காலிஸ்தானியர்களால் கலவர பூமியான அமிர்தசரஸ்: உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொலை மிரட்டல்!

Share it if you like it

காலிஸ்தான் பயங்கரவாத ஆதரவு அமைப்பு தலைவரின் உதவியாளர்களை கைது செய்ததை கண்டித்தும், உடனடியாக அவர்களை விடுதலை செய்யக் கோரியும் காலிஸ்தான் பயங்கரவாதிகள், கையில் வாள், தடி, துப்பாக்கிகளுடன் கோர்ட்டுக்கு வந்து போலீஸார் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நடிகரும், காலிஸ்தான் ஆதரவாளருமான தீப் சித்துவால் நிறுவப்பட்டது ‘வாரிஸ் பதான் தே’ அமைப்பு. ஆனால், தீப் சித்து கடந்தாண்டு நேரிட்ட கார் விபத்தில் பலியானார். இதையடுத்து, துபாயிலிருந்து இந்தியாவுக்கு வந்த அம்ரித்பால் சிங் அந்த அமைப்புக்குத் தலைவராக பதவியேற்றார். இவர் மீது, கடத்தல், திருட்டு மற்றும் அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இவ்வழக்குகளில் அம்ரித்பால் சிங்கை எந்த நேரத்திலும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது.

இந்த நிலையில், சமீபத்தில் ரூப்நகர் மாவட்டம் அஜ்னாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக அம்ரித்பால் சிங் சென்றார். அப்போது, அவரது ஆதரவாளர்கள் சம்ஹவுர் சாகிப்பில் வசிக்கும் வீரிந்தர் சிங் என்பவரை கடத்திச் சென்று தாக்கி இருக்கிறார்கள். இதில் பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக, அம்ரித்பால் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் சிலர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், இவ்வழக்கில் அம்ரித்பால் சிங்கின் நெருங்கிய உதவியாளர் லவ்பிரீத் தூஃபான் என்பவரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த அம்ரித்பால் சிங், தனது ஆதரவாளர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார். அதோடு, அவரது ஆதரவாளர்கள், வாள்கள், தடிகள் மற்றும் துப்பாக்கிகளை ஏந்தியபடி அமிர்தசரஸில் உள்ள அஜ்னாலா காவல் நிலையத்திற்கு விரைந்தனர். தகவலறிந்து, போலீஸ் நிலையத்தைச் சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டன. எனினும், போலீஸாரை தாக்கி விட்டு, அத்துமீறி உள்ளே நுழைந்தனர் போராட்டக்காரர்கள். இச்சம்பவத்தில் 6 போலீஸார் காயமடைந்து அஜ்னாலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, போராட்டக்காரர்களை கட்டுப்படுத்தும் முயற்சிகள் நடந்தன.

இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய அம்ரித்பால் சிங், “இந்திரா காந்தி எங்களை அடக்க முயன்றார், என்ன நடந்தது? தற்போது, அமித் ஷா காலிஸ்தானியர்களை தலைதூக்க விட மாட்டேன் என்று கூறியிருக்கிறார். இந்திரா காந்திக்கு ஏற்பட்ட கதிதான் அமித் ஷாவுக்கும் ஏற்படும். நாங்கள் எங்களது உரிமையான காலிஸ்தானை அமைதியான முறையில் கேட்கிறோம். 500 ஆண்டுகளுக்கும் மேலாக, எங்கள் முன்னோர்கள் இந்த மண்ணில் தங்கள் ரத்தத்தை சிந்தி இருக்கிறார்கள். ஆகவே, நாங்கள் இந்த நிலத்திற்கு உரிமை கோருகிறோம். எங்கள் கோரிக்கையை யாரும் பறிக்க முடியாது. சிலர் இந்துக்களுக்கான தனி தேசத்தை கேட்கும் போது நாங்கள் ஏன் காலிஸ்தானை கேட்கக்கூடாது

எங்கள் உரிமைக்காக போராடுவோம். எங்களை அடக்க உலகம் முழுவதிலுமிருந்து படைகள் வரட்டும். நாங்கள் இறந்து விடுவோம், ஆனால் எங்கள் கோரிக்கையை நாங்கள் கைவிட மாட்டோம். மேலும், அரசியல் உள்நோக்கத்துடன் மட்டுமே இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இன்னும் 1 மணி நேரத்திற்குள் வழக்கை ரத்து செய்யாவிட்டால், அடுத்து என்ன நடந்தாலும் அதற்கு நிர்வாகமே பொறுப்பாகும். எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று நினைக்கிறார்கள், அதனால் எங்கள் பலத்தை காட்டுவது அவசியம். கடந்த வாரம் கைது செய்யப்பட்ட எனது உதவியாளர்களில் ஒருவர் நிரபராதி. அவர் சிறையில் சித்திரவதை செய்யப்படுகிறார்” என்று கூறியிருக்கிறார்.

காலிஸ்தான் பயங்கரவாதிகளால் தற்போது அமிர்தசரஸ் நகரமே கலவர பூமியாக காட்சியளிக்கிறது.


Share it if you like it