ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளின் அட்டூழியம் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. நேற்று மார்க்கெட்டுக்குச் சென்ற காஷ்மீரி பண்டிட்டை பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்திருக்கும் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஜம்மு காஷ்மீரில், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் வசித்து வந்த ஹிந்து பண்டிட்கள் மற்றும் சிறுபான்மையினர் 1990-ம் ஆண்டு இஸ்லாமிய பயங்கரவாதிகளால் இனப்படுகொலை செய்யப்பட்டனர். இதனால், உயிருக்கு பயந்து தங்களது ஆஸ்தி, அந்தஸ்து எல்லாவற்றையும் அங்கேயே விட்டு விட்டு, அகதிகளாக வெளியேறினார்கள் காஷ்மீர் பண்டிட்கள். இவர்கள், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வசித்து வரும் நிலையில், 2019-ம் ஆண்டு மீண்டும் மத்தியில் ஆட்சி அமைத்த பா.ஜ.க. அரசு, காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்ததோடு, அங்கு கவர்னர் ஆட்சியை அமல்படுத்தி, பயங்கரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது.
இதன் பயனாக, ஏராளமான பயங்கரவாதிகள் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டதோடு, அவர்களுக்கு உறுதுணையாக இருந்த இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இதையடுத்து, பல்வேறு மாநிலங்களில் வசித்து வரும் காஷ்மீரி பண்டிட்கள், மீண்டும் தங்களது சொந்த ஊரான காஷ்மீருக்கே சென்று கொண்டிருக்கிறார்கள். மேலும், ஹிந்து பண்டிட்களை காஷ்மீரில் மீள் குடியேற்றம் செய்வதற்கான நடவடிக்கையிலும் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. ஆனால், காஷ்மீரில் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட பண்டிட்களை குறிவைத்து இஸ்லாமிய ஜிகாதி பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதலை தொடங்கி இருக்கிறார்கள்.
மேலும், ஜிகாதி பயங்கரவாதிகளிடமிருந்து காஷ்மீரி பண்டிட்களுக்கு கொலை மிரட்டல் கடிதமும் அனுப்பப்பட்டது. லஷ்கர்-இ-இஸ்லாம் என்ற பயங்கரவாத அமைப்பு அனுப்பி இருக்கும் கடிதத்தில், “ஆர்.எஸ்.எஸ். முகவர்கள் மற்றும் காஷ்மீருக்கு புலம்பெயர்ந்தோர் இங்கிருந்து வெளியேறுங்கள். இல்லையென்றால் மரணத்தை எதிர்கொள்ளுங்கள். காஷ்மீரில் மற்றுமொரு இஸ்ரேல் வேண்டும் என்று முஸ்லிம்களைக் கொல்ல விரும்பும் காஷ்மீரி பண்டிட்டுகளுக்கு காஷ்மீரில் இடமில்லை. உங்கள் பாதுகாப்பை இரட்டிப்பாகவோ அல்லது மூன்று மடங்காகவோ அதிகரித்துக் கொள்ளவும். நீங்கள்தான் எங்கள் இலக்கு. எனவே, நீங்கள் இறக்கப் போகிறீர்கள்” என்று கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில்தான், ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் காஷ்மீர் பண்டிட் ஒருவரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். தெற்கு காஷ்மீரின் அச்சன் பகுதியில் வசித்து வந்த சஞ்சய் சர்மா, நேற்று காலை 11 மணியளவில் மார்க்கெட்டுக்கு சென்றிருக்கிறார். அப்போது, அவரை பின்தொடர்ந்து வந்த பயங்கரவாதிகள் சஞ்சய் சர்மாவை துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்கள். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறார்கள். ஆனால், சிகிச்சை பலனின்றி சஞ்சய் சர்மா உயிரிழந்து விட்டார். தகவலறிந்த பாதுகாப்புப் படையினர், சம்பவம் நடந்த இடத்தை சுற்றி வளைத்து பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இச்சம்பவம் காஷ்மீரி பண்டிட்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.