ஹரியானாவில் ஓடும் காரில் இருந்து கரன்ஸி வீசிய வீடியோ வைரலான நிலையில், 2 பேரை குருகிராம் போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.
சமூக வலைத்தளங்களில் நேற்று முதல் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், வெள்ளை நிற காரின் டிக்கியில் இருந்து கரன்ஸி நோட்டுகளை ஒருவர் வீசிச் செல்கிறார். 15 வினாடிகள் நீளமான அந்த வீடியோவில், முகத்தில் முகமூடி அணிந்த ஒருவர் கரன்ஸிகளை வீசிச் செல்ல, மற்றொருவர் வாகனத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில் மேற்கண்ட வீடியோ, ஹரியானா மாநிலம் குருகிராமில் எடுக்கப்பட்டது தெரியவந்தது.
அதாவது, குருகிராம் கோல்ஃப் கோர்ஸ் சாலையில் இச்சம்பவம் நடந்திருக்கிறது. கரன்ஸிகள் வீசப்படும் காட்சியை பின்னால் வந்த காரில் வந்தவர் வீடியோ எடுத்திருக்கிறார். இதன் பிறகு, இந்த வீடியோ மேற்கண்ட இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்கள். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், குருகிராம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பணத்தை வீசியது பிரபல யூடியூபர் ஜோராவர் சிங் கல்சி, அவரது நண்பர் குர்ப்ரீத் சிங் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸார் இருவரையும் கைது செய்தனர். விசாரணையில், ஷாகித் கபூரின் சமீபத்திய வெப் சீரிஸான ‘ஃபார்ஸி’யில் இருந்து ஒரு காட்சியை பார்த்து, அதேபோல நடிக்க முயற்சித்தது தெரியவந்தது. கரன்ஸிகளை வீசும் வீடியை காட்சி இதோ…