சென்னை விமான நிலையத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த விமான முனையத்தை திறந்து வைப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 27-ம் தேதி சென்னை வருகை தரவிருக்கிறார்.
சென்னை விமான நிலையத்தில் 2,400 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 2.36 லட்சம் சதுர மீட்டரில் ஒருங்கிணைந்த விமான முனையங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இவற்றில், முதல் கட்டடத்தின் பணிகள் நிறைவடைந்து விட்டன. இது பயணிகளின் பயன்பாட்டிற்காக திறக்கப்படவிருக்கிறது. இந்த முனையம் செயல்பாட்டிற்கு வந்ததும், பயணியரின் எண்ணிக்கை 2.20 கோடியில் இருந்து ரூ.3.50 கோடியாக அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த முனையத்தின் கீழ் தளத்தில் பயணிகளின் உடைமைகள் கையாளப்படும்.
முதல் தளத்தில் சர்வதேச வருகை பயணிகளுக்கான வழக்கமான நடைமுறைகளும், 2-வது தளத்தில் பயணிகளுக்கான புறப்பாடு நடைமுறைகளும் மேற்கொள்ளப்படும். இந்த புதிய முனையத்தில் மொத்தம் 5 தளங்கள் அமைக்கப்படவிருக்கின்றன. புதிதாக கட்டப்பட்டிருக்கும் ஒருங்கிணைந்த விமான நிலைய முனையங்களின் முதல் கட்டடத்தை திறந்து வைப்பதற்காகத்தான் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 27-ம் தேதி சென்னைக்கு வருகை தரவிருக்கிறார்.