ஆர்.ஆர்.ஆர். படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் உலகம் முழுவதும் தீயாக பரவி வருகிறது.
பாகுபலி படத்தை இயக்கிய ராஜமௌலி, அடுத்ததாக இயக்கிய படம் ஆர்.ஆர்.ஆர். இப்படம், 1,200 கோடி ரூபாய்க்கும் மேல் ஈட்டி வசூல் சாதனை படைத்தது. குறிப்பாக, ஜப்பானில் இதுவரை ரஜினி நடித்த முத்து படம்தான் அதிக வசூல் சாதனை படைத்ததாக இருந்தது. ஆனால், ஆர்.ஆர்.ஆர். படம் இந்த சாதனையையும் முறியடித்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, இப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை கொண்டது என்றே கூறலாம்.
இந்த நிலையில், இப்பாடல் முதலில் கோல்டன் குளோப் விருதையும், பின்னர் மிக உயரிய ஆஸ்கார் விருதையும் வென்றது. இதையடுத்து, நாட்டு நாட்டு பாடல் உலகம் முழுவதும் தீயாகப் பரவி வருகிறது. இப்பாடலுக்கு பாகிஸ்தான் நாட்டின் பிரபல நடிகையான ஹனியா ஆமிர், ஒரு இளைஞருடன் நடனமாடும் வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதேபோல, ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பிரபல நடனக் குழுவினரும் இப்பாடலுக்கு நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக, தலைநகர் டெல்லியிலுள்ள ஜெர்மனி தூதரத்தின் முன்பு, அந்நாட்டின் இந்தியாவுக்கான தூதரும், அத்தூதரகத்தின் ஊழியர்களும் நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடும் வீடியோவும் வைரலாகி வருகிறது.