என்னை அரசியலுக்குள் இழுக்காதீர்கள், தாங்க மாட்டீர்கள் என்று பிக்பாஸ் டைட்டில் வின்னர் பாலாஜி முருகதாஸ் சவால் விடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தனியார் தொலைக்காட்சியான விஜய் டி.வி.யில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகி வருகிறது. 100 நாட்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக களமிறங்கியவர் பாலாஜி முருகதாஸ். இவர், ஆரியுடன் சண்டை, ஷனம் ஷெட்டி குறித்த கருத்து, ஷிவானியுடன் காதல் என்பன போன்ற விவகாரங்களால் பரபரப்பை கிளப்பியவர். இதன் காரணமாக பலமுறை எலிமினேட்டாகி, ரசிகர்களின் ஓட்டால் தப்பிப் பிழைத்து வந்தவர், கடைசியில் 4-வது சீசனின் 2-வது பரிசை தட்டிச் சென்றார். இதன் பிறகு, கடந்தாண்டு புதிதாகத் துவக்கப்பட்ட பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில், கமல்ஹாசனுக்கு பதிலாக நடிகர் சிம்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பாலாஜி முருகதாஸ் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த நிலையில்தான், பாலாஜி முருகதாஸ் போட்ட ஒரு ட்வீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, பாலாஜி முருகதாஸ் கடந்த 25-ம் தேதி மாலை 6.31 மணிக்கு தனது ட்விட்டரில் ஒரு பதிவை போட்டிருக்கிறார். அந்தப் பதிவில், தமிழக முதல்வர் ஸ்டாலினை டேக் செய்திருக்கும் பாலாஜி, “தயவு செய்து டாஸ்மாக் கடைகளை மூடுங்கள். ஆன்லைன் ரம்மியுடன் ஒப்பிடும்போது இதுதான் அதிகமான மக்களையும், குடும்பத்தையும் கொன்று அழிக்கிறது” என்று குறிப்பிட்டிருந்தார். இந்த ட்வீட் ஏராளமான ரசிகர்களின் ஆதரவை பெற்றது. மேலும், பரவாயில்லையே பாலாஜி பொதுநலத்துடன் பேசுகிறாரே என்று ரசிகர்கள் பாராட்டித் தள்ளினார்கள்.
ஆனால், இதன் பிறகு பாலாஜி போட்ட ட்வீட்தான் பெரும் பரபரப்பை கிளப்பி இருக்கிறது. கடந்த 26-ம் தேதி அதிகாலை 4.36 மணியளவில் மீண்டும் ஒரு ட்வீட்டை போட்டிருக்கும் பாலாஜி முருகதாஸ், “என்னைப் போலவே தமிழகத்தில் குடியால் ஆதரவற்று நிற்பவர்கள் ஏராளம். அதேபோல, மதுவால் குடும்பத்தை இழந்தவர்களும் அதிகம்” என்று குறிப்பிட்டிருப்பவர், கடைசியாக பதிவிட்டிருக்கும் 2 வரிகள்தான் ஸ்டாலின் தூக்கத்தை கெடுத்திருக்கிறது. அதாவது, “என்னை அரசியலுக்கு இழுக்காதீர்கள், நீங்கள் தாங்க மாடீர்கள்” என்று பாலாஜி முருகதாஸ் பதிவிட்டிருக்கிறார். இதுதான் தற்போது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
வழக்கம் போல் உ.பி.ஸ்கள் பாலாஜி முருகதாஸுக்கு எதிராக கமென்ட்களை பதிவிட்டு சேற்றை வாரி இறைத்து வருகின்றனர். அதேசமயம், மதுக்கடைகளை மூடச் சொன்னதில் தவறில்லையே என்று பாலாஜிக்கு ஆதரவான கமென்ட்களும் வரத்தான் செய்கிறது.