புனேயில் பெண்ணை கொடுரமாகத் தாக்கிய வீடியோ வைரலான நிலையில், அர்ஷத் கமால் கான் கைது செய்யப்பட்டிருக்கிறான்.
மகாராஷ்டிர மாநிலம் புனேவின் அகுர்டி பகுதியில் அர்ஷத் கமால் கான் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் இணைந்து ஒரு வர்த்தக நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். இக்கடையில் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த 42 வயதான பபிதா மகேந்திர கல்யாணி என்பவர் துப்புரவு வேலை செய்து வந்தார். இவருக்கு 3 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லையாம். இதுகுறித்து அர்ஷத் கான் மற்றும் அவரது சகோதரரிடம் பலமுறை கேட்டும் காலம் தாழ்த்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கடைக்கு வந்த பபிதா, அர்ஷத் கானிடம் சம்பளத்தை கேட்டிருக்கிறார். அதற்கு, அர்ஷத் கான் முறையாக பதிலளிக்கவில்லையாம். இதனால், இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. ஆத்திரமடைந்த அர்ஷத் கான், பபிதாவின் முகம், மார்பு, வயிறு பகுதியில் சரமாரியாகத் தாக்கத் தொடங்கினான். இதில், வாய், மூக்கில் இருந்து ரத்தம் கொட்டிய நிலையில், பபிதா மயக்கமடைந்து சாய்ந்து விட்டார்.
இதையடுத்து, காயமடைந்த பபிதா அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர், இதுகுறித்து நிகிடி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதனிடையே, பபிதாவை அர்ஷத் கான் கொடூரமாகத் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதைத் தொடர்ந்து, நிகிடி போலீஸார் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் அர்ஷத் கான் மீது வழக்குப் பதிவு செய்து, கைது செய்து சிறையில் அடைத்தனர். சம்பளம் கேட்ட பெண்ணை, கொடூரமாகத் தாக்கிய இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.