சத்துணவுத் திட்டத்திற்கு வழங்கப்பட்ட 600 கிலோ அரிசியை, கேரளாவுக்கு கடத்த முயன்ற வழக்கில், தி.மு.க. நிர்வாகியை போலீஸார் தேடி வருகின்றனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை போலீஸார், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கோவை பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் ஒரு கார் மற்றும் ஆட்டோ நின்று கொண்டிருந்தது. அவற்றை அதிகாரிகள் சோதனை செய்தபோது, ஆட்டோவில் தலா 50 கிலோ எடை கொண்ட 12 அரிசி மூட்டைகள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, ஆட்டோ மற்றும் காரை பறிமுதல் செய்த போலீஸார், போத்தனுார் குருசாமி பிள்ளை வீதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ரவிக்குமார், சுந்தராபுரத்தைச் சேர்ந்த அசோக்குமார் ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில், சுந்தராபுரம் முதலியார் வீதியைச் சேர்ந்த தி.மு.க. கலை இலக்கியப் பிரிவு மாவட்ட துணை அமைப்பாளர் இமயநாதன், அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட சத்துணவு அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, இமயநாதன், ரவிக்குமார், அசோக்குமார், சத்துணவுத் திட்ட பணியாளர் குடியரசு ஆகியோர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, ரவிக்குமார், அசோக்குமார் ஆகியோரை கைது செய்த நிலையில், முக்கிய குற்றவாளியான இமயநாதனை தேட் வருகின்றனர்.