பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட சர்க்கரை கட்டி கட்டியாகவும், பருப்பில் புழு, பூச்சிகள் நெளிந்து கொண்டும் இருந்ததால், பொதுமக்கள் ஆவேசமடைந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ளது முருகம்பட்டு கிராமம். இங்கு 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் உள்ள ரேஷன் கடை கட்டடம் சேதமடைந்ததால், அருகிலுள்ள வாடகை கட்டடத்தில் ரேஷன் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வினியோயகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த சூழலில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு ரேஷன் பொருட்கள் வாங்கச் சென்ற மக்களுக்கு கடும் அதிர்ச்சி. காரணம், அரிசி, துவரம் பருப்பில் புழு பூச்சிகள் நெளிந்து கொண்டும், சர்க்கரை கட்டி கட்டியாகவும் இருந்தன. இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் பொருட்களை வாங்க மறுத்து ரேஷன் கடையை முற்றுகையிட்டனர்.
தகவலறிந்த தாசில்தார் விஜயராணி, வட்ட வழங்கல் அலுவலர் மலர்விழி உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரேஷன் பொருட்களை ஆய்வு செய்தனர். அப்போது, அரிசி, பருப்பில் புழு பூச்சிகள் இருப்பதும், சர்க்கரை கட்டியாக இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, பொருட்கள் வினியோகத்தை நிறுத்திய அதிகாரிகள், ரேஷன் கடையிலிருந்த பொருட்களை திருத்தணி நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கிற்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டனர். மேலும், தரமான ரேஷன் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாசில்தார் விஜயராணி உறுதியளித்தைத் தொடர்ந்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் பொருட்கள் தரமற்ற முறையில் இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தி இருக்கும் நிலையில், இது தொடர்பாக வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த பலரும் திராவிட மாடல் ஆட்சியில் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் லட்சணத்தைப் பாரீர் என்று வசைபாடி வருகின்றனர்.