ஒடிஸாவின் சம்பல்பூர் நகரில் நடந்த ஹனுமன் ஜெயந்தி விழா கொண்டாட்டத்தின்போது, இரு தரப்பினரிடையை ஏற்பட்ட மோதலில் வி.ஹெச்.பி. அமைப்பைச் சேர்ந்த நபர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஹிந்து அமைப்புகள் இன்று 12 பந்த் நடத்தி வருகின்றனர்.
ஒடிஸா மாநிலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. அந்த வகையில், சம்பல்பூர் நகரிலும் ஹனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதில், விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் உள்ளிட்ட பல்வேறு ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். அப்போது, மசூதியில் இருந்த முஸ்லீம்கள், ஹனுமன் ஜெயந்தி விழாக் குழுவினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில், சன்சிங்காரி கிராமத்தைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க சந்திர மிர்தார் என்பவர் குத்திக் கொலை செய்யப்பட்டார். மேலும், 4 பேர் பலத்த காயமடைந்தனர்.
இந்த நிலையில்தான், இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து ஹிந்து அமைப்புகள் இன்று பந்த் அறிவித்திருக்கின்றன. இதன்படி, ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அமைதியான முறையில் பைக் பேரணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதையொட்டி, அனைத்து கல்வி நிலையங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள் மூடப்பட்டன. எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாமல் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டிருக்கின்றனர்.