எங்க பெரிய தலைவர் கலைஞர் ஆட்சியில் மூட்டை மூட்டையாக அரிசி, பருப்புகளை தூக்கிச் சென்றேன். நீ என்னடான்னா ரெண்டு பாக்கெட் ஆயில் தரமாட்டேங்குற என்று ரேஷன்கடை ஊழியரை தி.மு.க. நிர்வாகி மிரட்டும் வீடியோ வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
திண்டுக்கல் மாவட்ட நுகர்வோர் மொத்த விற்பனை பண்டக சாலை வேடசந்தூரில் அமைந்திருக்கிறது. இந்த நுகர்வோர் பண்டக சாலையின் மூலம் மொத்தம் 1,233 ரேஷன் கார்டுகளுக்கு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. சந்தைப்பேட்டை, நேருஜி நகர், வசந்தா நகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இங்கு ரேஷன் பொருள்களை வாங்கி வருகின்றனர். இங்கு ஊழியராக பணியாற்றுபவர் மேனகா. இந்த சூழலில், கடந்த 19-ம் தேதி மேனகா பணியில் இருந்தபோது, வேடசந்தூர் தி.மு.க. அவைத்தலைவர் அமீர் பாட்ஷா என்பவர் கடைக்குச் சென்றிருக்கிறார்.
அப்போது, 10-க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகளை கொடுத்து பொருட்களை கேட்டிருக்கிறார் அமீர் பாட்சா. அதற்கு, உங்களுடைய ரேஷன் கார்டுக்கு மட்டும் பொருட்களை வாங்கிக் கொள்ளுங்கள். மற்ற ரேஷன் கார்டுகளுக்கு உரியவர்கள் வந்தால்தான் பொருட்களை தருவேன் என்று கூறி மேனகா தரமறுத்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த அமீர் பாட்சா, மேனகாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, ”எங்க பெரிய தலைவர் கலைஞர் ஆட்சியில் இருந்தபோது இதே மூட்டை மூட்டையாக, பெட்டி பெட்டியாக அரிசி, பருப்புகளை தூக்கிச் சென்றோம். அப்போதிருந்த நகர செயலாளர் அன்வரை வைத்து தூக்கிச் சென்றோம். நானும் பெட்டி பெட்டியாக வீட்டுக்கு தூக்கிச் சென்றேன்.
கட்சிக்காரனுக்கு இங்கிருக்கும் நாலு கடைகளும் சொந்தம். நீ என்னடான்னா ரெண்டு பாக்கெட் எண்ணெய் இல்லை என்று சொல்கிறாய். நீ என்ன சேல்ஸ்மேன். தற்போது இருப்பவர் சின்ன முதலமைச்சர். நீ ஒன்னாம் நம்பர் நாடகம், மனோகர் இரண்டாம் நம்பர் நாடகம். என்னிடம் விளையாட்டுத்தனமாக விளையாட வேண்டாம். விபரீதம் ஆகிவிடும். நாளைக்கு இந்த கடையில் நீ வேலைக்கு இருக்க மாட்டாய். உன்னால் முடிந்ததை பார்” என்றும் எச்சரித்துப் பேசினார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த பலரும் தி.மு.க. ஆட்சியில் அரசு அதிகாரிகள் பயந்து பயந்து வேலை பார்ப்பதாக கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.