கோவையில் தீபாவளிக்கு முதல் நாள் வெடித்தது அதிசக்தி வாய்ந்த வெடிகுண்டு என்று என்.ஐ.ஏ. அதிர்ச்சித் தகவலை வெளியிட்டிருக்கிறது.
கோவை கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு, கடந்தாண்டு அக்டோபர் மாதம் 23-ம் தேதி அதிகாலை கார் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில், காரில் இருந்த உக்கடத்தைச் சேர்ந்த ஜமேஷா முபின் என்பவன் உயிரிழந்தான். இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் பதற்றத்தையும், கடும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி, முபினுடன் தொடர்பில் இருந்த முகமது அசாருதீன், அப்சர்கான், முகமது தல்கா, முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்ட நிலையில், கைதான 6 பேரிடமும் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, ஜமேஷா முபினுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக முகமது ஷேக் பரீக், உமர் பாரூக், சீனிவாசன், பெரோஸ்கான் என மேலும் 5 பேரை கைது செய்தனர். பின்னர், கைதான 11 பேரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தனித்தனியாக காவலில் எடுத்து, கோவை, சத்தியமங்கலம், குன்னூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், இறந்த முபினின் வீட்டிலும் சோதனை மேற்கொண்டனர். விசாரணையில், இறந்த முபினுக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு இருந்ததும், கோவை உள்பட தமிழகம் முழுவதும் பயங்கர நாசவேலைக்கு திட்டமிட்டதும் தெரியவந்தது.
மேலும், இவர்கள் தமிழகத்தில் உள்ள கோயில்கள் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியதும், இதற்காக பயங்கர வெடிபொருட்களை சேகரித்து முபினின் வீட்டில் வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இத்திட்டத்தை அரங்கேற்றுவது தொடர்பாக முபின் தலைமையில் குன்னூரில் உள்ள உமர் பாரூக்கின் வீடு, சத்தியமங்கலம் காடுகளில் கூடி, கூட்டம் நடத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து, என்.ஐ.ஏ. அதிகாரிகள் இந்த வழக்கில் தங்களுக்கு கிடைத்த ஆதாரங்களை எல்லாம் ஆவணங்களாக திரட்டி குற்றப்பத்திரிகை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், முதலில் கைது செய்யப்பட்ட 6 பேருக்கு எதிராக தயாரிக்கப்பட்ட குற்றப்பத்திரிகையை என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று சென்னை பூந்தமல்லியில் உள்ள சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இந்த குற்றப்பத்திரிகையில்தான், கோவையில் கோயில் முன்பு நடத்தப்பட்ட தாக்குதல் கியாஸ் சிலிண்டர் வெடிப்பு தாக்குதல் இல்லை. ஐ.இ.டி. எனப்படும் அதிசக்தி வாய்ந்த வெடிகுண்டைக் கொண்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதான் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.