ஆருத்ரா மோசடியில் தனக்கு தொடர்பு இருப்பதாக அவதூறான கருத்துகளைத் தெரிவித்த, தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, உடனடியாக மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லையென்றால் நஷ்டஈடாக 500 கோடியே 1 ரூபாய் வழங்க வேணடும் என்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, கடந்த ஏப்ரல் 14-ம் தேதி தி.மு.க. பிரமுகர்களின் சொத்துப் பட்டியலை வெளியிட்டார். இந்த விவகாரம் குறித்து அண்ணாமலை மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்த தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர். எஸ்.பாரதி, ஆருத்ரா முறைகேடு விவகாரத்தில் அண்ணாமலை 84 கோடி ரூபாய் பெற்றதாக தெரிவித்தார். இதை மறுத்திருக்கும் அண்ணாமலை அவதூறாக பேசிய புகாரில் ஆர்.எஸ்.பாரதி மன்னிப்பு கேட்கக் கோரி வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். தவறும்பட்சத்தில் 500 கோடியே 1 ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இது தொடர்பாக ஆர்.எஸ்.பாரதிக்கு பா.ஜ.க. மாநிலத் துணைத் தலைவரும், வழக்கறிஞருமான ஆர்.சி.பால்கனகராஜன் அனுப்பி இருக்கும் நோட்டீஸில், “கடந்த ஏப்ரல் 14-ம் தேதி அண்ணாமலை நடத்திய செய்தியாளர்கள் சந்திப்புக்குப் பின்னர், அண்ணா அறிவாலயத்தில் நீங்கள் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தினீர்கள். அப்போது, ஒரு இடத்தில் ஆருத்ரா நிறுவன முறைகேடு தொடர்பாக பேசும்போது, அண்ணாமலை மற்றும் அவரது ஆதரவாளர்கள் 84 கோடி ரூபாய் நேரடியாக பெற்றதாகக் கூறினீர்கள். ஆனால், அண்ணாமலைக்கு யார் பணம் கொடுத்தது?, அவரது ஆதரவாளர்கள் யார் என்பது உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்கவில்லை.
இவை அனைத்தும் தி.மு.க.வை பொதுமக்கள் மத்தியில் அம்பலப்படுத்திய அண்ணாமலைக்கு எதிராக ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள். உங்கள் கட்சியில் உள்ளவர்களை போன்று இல்லாமல், அரசியலில் உயரிய கொள்களையும், நன்னெறிகளையும் பின்பற்றுபவர் அண்ணாமலை. அவருக்கு ஆருத்ரா முறைகேட்டில் தொடர்பு உள்ளதாகவும், பணம் பெற்றதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை. எனவே, இதுதொடர்பாக நீங்கள் கூறிய கருத்துகளுக்கு நிபந்தனையற்ற மன்னிப்புக் கோர வேண்டும். மன்னிப்புக் கேட்க தவறும்பட்சத்தில் 500 கோடியே 1 ரூபாய் நஷ்டஈடாக வழங்க வேண்டும். இல்லையென்றால், அண்ணாமலைக்கு எதிராக அவதூறு பரப்பிய விவகாரத்தில் சிவில் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.