சத்தீஸ்கரில் 10 பாதுகாப்புப் படை வீரர்களை வெடிகுண்டு வீசி கொலை செய்ததற்கு, பழிக்குப்பழியாக 3 நக்சலைட்டுகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொலை செய்திருக்கிறார்கள்.
சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்ட்டுகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு, சத்தீஸ்கர் மாநிலம் தன்டேவாடா மாவட்டம் அரன்பூர் அருகே நக்சல் தடுப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, திடீரென்று நக்சலைட்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 10 வீரர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, மாநில சிறப்பு தனிப்படை போலீஸாரும், மத்திய ரிசர்வ் போலீஸாரும் இணைந்து நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி மாவட்டம் கிட்மரா வனப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதனடிப்படையில் வனப் பகுதியில் போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பதுங்கி இருந்த நக்சலைட்டுகள் போலீஸார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கு போலீஸ் தரப்பில் பதில் தாக்குதல் நடத்தப்பட்டது. இரு தரப்புக்கும் இடையே நடந்த மோதலில் 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சம்பவ இடத்தில் மேலும் சில நக்சலைட்டுகள் பதுங்கி இருக்கலாம் என்பதால் போலீஸார் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.