நெல்லை மாவட்டத்திலுள்ள தேவாலயம் ஒன்றில் காணிக்கையாக 3 ஆரஞ்சு பழம் மட்டுமே கொடுக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த பாதிரியார், அப்பழங்களை மூலைக்கு ஒன்றாக துக்கி வீசியதோடு, பங்கு மக்களை எச்சரித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
திருநெல்வேலி மாவட்டம் அழகப்பபுரம் அருகே உள்ளது ராஜகிருஷ்ணாபுரம். இங்குள்ள தேவாலயத்தில் பங்குத் தந்தையாக பணிபுரிந்து வருபவர் கிறிஸ்டியான். வழக்கமாக திருப்பலிக்கு வரும் பங்கு மக்கள், பாதிரியாருக்கு காணிக்கை வழங்குவது வழக்கம். இக்காணிக்கைகள் பெரும்பாலும் பணமாகத்தான் இருக்கும். பாதிரியாரும் காணிக்கையை பெற்றுக் கொண்டு திருப்பலியை நிறைவேற்றி, பிரார்த்தனை செய்து பங்கு மக்களுக்கு ஆசீர்வாதம் வழங்குவது வழக்கம். அந்த வகையில், சம்பவத்தன்று சூசையப்பர் அன்பியம் குழுவைச் சேர்ந்த 30 குடும்பத்தினர் திருப்பலிக்கு வந்திருக்கிறார்கள். அப்போது, பாதிரியார் கிறிஸ்டியானுக்கு காணிக்கையாக 3 ஆரஞ்சு பழங்களை மட்டும் கொடுத்திருக்கிறார்கள்.
இதனால் ஆவேசமான பாதிரியார், “சூசையப்பர் அன்பியம் குழுவினர் இந்த வழிபாட்டை மிகவும் அருமையாக வடிவமைத்து, சிறப்பாக பாடல்களை பாடி திருப்பலியை சிறப்பாக நிறைவேற்றி இருக்கிறார்கள். உங்களை பாராட்டுகிறேன். ஆனாலும், உங்களுக்கு மிகப்பெரிய அறிவுரை சொல்ல வேண்டி இருக்கிறது. நீங்கள் வேறு இடங்களில் எல்லாம் ஆயிரக்கணக்கான ரூபாய் செலவழித்து திருப்பலியை நிறைவேற்றி இருக்கிறீர்கள். அதனால் ஏதேனும் உங்களுக்கு பயனுண்டா. மழை வந்து எல்லாம் விளங்காமல் போய் விட்டது. நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும்? இங்கு வந்து 30 பேரும் காணிக்கை பவனியில் கலந்துகொண்டிருக்க வேண்டும். சும்மா வெறும் கையை வீசிக்கொண்டு வந்தால் என்ன அர்த்தம்?
நான் என்ன பிச்சைக்காரப் பயலா 3 ஆரஞ்சுப் பழத்தை மட்டும் தந்திருக்கிறீர்கள்? இது என்ன கண்திருஷ்டி கழிக்க, இப்படி ஒண்ணு, அப்படி ஒண்ணு போடுவதற்கா? என்று கேட்டபடியே திசைக்கு ஒன்றாக 3 ஆரஞ்சு பழங்களையும் வீசினார். நீங்கள் கோடீஸ்வரர் என்றால் நானும் கோடீஸ்வரர்தான். நான் இங்கு பங்குத்தந்தையாக இருக்கும் வரை இச்சம்பவத்தை மறக்க மாட்டேன். நீங்களும் நினைவில் வைத்திருக்க வேண்டும்” என்று கூறிவிட்டு திருப்பலியை முடித்துக் கொண்டு ஆவேசமாகச் சென்று விட்டார். இதனால், தேவாலயத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதைப் பார்த்த பலரும் எல்லாம் பணம்தான் போல என்று விமர்சித்து வருகிறார்கள்.