‘தி கேரளா ஸ்டோரி’ – தமிழகத்தில் உஷார் நிலை

‘தி கேரளா ஸ்டோரி’ – தமிழகத்தில் உஷார் நிலை

Share it if you like it

‘தி கேரளா ஸ்டோரி’ – தமிழகத்தில் உஷார் நிலை

கேரளாவை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள திரைப்படமான ‘தி கேரளா ஸ்டோரி ‘ மே 5ம் தேதி (நாளை) நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சுதிப்தோ சென் இயக்கத்தில், விபுல் அம்ருத்லால் ஷா தயாரித்துள்ள ‘தி கேரளா ஸ்டோரியில்’ அதா ஷர்மா, யோகிதா பிஹானி, சித்தி இத்னானி மற்றும் சோனியா பாலானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தின் டீசர் வெளியான போதே பெரும் சர்ச்சை வெடித்தது. அந்த படத்தின் டீசரில் ஒரு பெண் “என் பெயர் ஷாலினி உன்னிகிருஷ்ணன், நான் செவிலியராகி மக்களுக்கு சேவை செய்ய விரும்பினேன். ஆனால் இப்போது ஆப்கானிஸ்தானில் பாத்திமா என்ற பெயரில் ஒரு இஸ்லாமிய பயங்கரவாதியாக உள்ளேன். நான் தனியாக இல்லை. என்னைப் போல் 32,000 பெண்கள் உள்ளனர். கேரளாவில் பிறந்த என்னை போன்ற சாதாரண பெண்களை மதமாற்றி சிரியா, ஏமன் ஆகிய நாடுகளில் பயங்கரவாதிகளாக மாற்றும் கொடிய ஆட்டம் ஆடப்படுகிறது. அதுவும் திறந்த வெளியில்.தடுக்க யாரும் இல்லையா?இது என் கதை மற்றும் அந்த 32,000 பெண்களின் கதை இது கேரளக் கதை.” என கூறுகிறாள்.

இந்த படத்தின் இயக்குனரான சுதிப்தோ சென், இது ஆயிரக்கணக்கான சிறுமிகளின் அவலநிலையைப் பற்றிய கதை என தெரிவித்தார்.
கேரளாவில் இப்படிப்பட்ட சதி வேலை நடப்பது குறித்து அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தனும் முன்பே எச்சரித்திருந்தார்.
அடுத்த 20 ஆண்டுகளில் கேரளாவை முஸ்லிம் மாநிலமாக்குவதே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் திட்டம் என்று அச்சுதானந்தன் கூறினார்.
காங்கிரஸ் தலைவரும் கேரளா முன்னாள் முதல்வரான உம்மன்சாண்டியும் கடந்த 2012ம் ஆண்டு மாநிலங்களவையில் பேசும் போது கேரளாவில் கடந்த 2006ம் ஆண்டு முதல் 2,667 பெண்கள் இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.

உண்மை இவ்வாறாக இருக்க சமீபத்தில் இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியானதில் இருந்து கேரளாவின் அரசியல் வட்டாரத்தில் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. கேரளாவை பயங்கரவாதிகளின் மையமாக முன்னிறுத்துவதற்கான திட்டம் இது. நாட்டில் மத வெறுப்புணர்வை தூண்டும் சங் பரிவாரின் முயற்சியை இந்த திரைப்படம் ஊக்குவிக்கிறது என கேரளா முதல்வர் பினராயி விஜயன் கடுமையாக சாடியுள்ளார்.

கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி., சசி தரூர், இந்த படம் கேரளாவை தவறாக சித்தரிக்கிறது என்றும் யதார்த்தமான சூழ்நிலையை மிகப்படுத்தி காட்டுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் திரைப்படத்தில் கூறுவது போல் கேரளாவில் 32,000 பெண்களை கட்டாயப்படுத்தி இஸ்லாம் மதத்திற்கு மாற்றியதை நிரூபிப்பவருக்கு ரூ. 1 கோடி வழங்குவதாக காங்கிரஸ் எம்பி சசி தரூர் அறிவித்துள்ளார்.

கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சி இந்த திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பாஜக இந்த திரைப்படத்திற்கு ஆதரவாக களமிறங்கியுள்ளது. கேரளாவின் பாஜக மாநிலத் தலைவர் கே சுரேந்திரன், கேரள முதல்வர் மற்றும் ஆளும் சிபிஐ(எம்) ஆகியோரின் நிலைப்பாடு “இரட்டைத் தரம்” வாய்ந்தது என குற்றம்சாட்டினார்.

ஆக மொத்தத்தில் கேரளாவில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் காங்கிரஸின் கருத்துப்படி, பெண்கள் மதம் மாற்றப்பட்டு பயங்கரவாதிகளாக மாறியதாகவும், இந்தியாவிலும் உலகிலும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் படத்தில் கூறுவது முற்றிலும் பொய்.
இதற்கிடையில், கேரளா ஸ்டோரிக்கு மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும் எதிர்ப்புகள் காரணமாக படத்தில் இருந்து 10 காட்சிகளை நீக்கியுள்ளது.

இதையும் தாண்டி நாளை கேரளாவில் இந்த திரைப்படம் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இப்படத்தின் டிரெய்லர் வெளியான பின் ‘தி கேரளா ஸ்டோரிக்கு’ தடை விதிக்கும்படி கோரி முஸ்லிம் மதகுரு அமைப்பான ஜமியத் உலமா-ஐ-ஹிந்த் உச்ச நீதிமன்றத்தை அணுகியது.

இந்த திரைப்படம் ஒட்டுமொத்த சமூகத்தையும் இழிவுபடுத்துவதாகவும், முஸ்லிம்களின் உயிருக்கும் வாழ்வாதாரத்துக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் மனுதாரர்கள் முறையிட்டனர். மேலும் இந்த திரைப்படம் ஒரு கற்பனைப் படைப்பு என்றும், அதன் கதாபாத்திரங்களுக்கும் வாழும் அல்லது இறந்த எந்தவொரு நபருக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை என்றும் மனுவில் கூறப்பட்டிருந்தது.

ஆனால் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் வெளியாவதற்கு தடை விதிக்கும்படி கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன. மேலும் இந்த திரைப்படம் தொடர்பாக கேரள உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு மனுதாரர்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கிடையில் தமிழகத்தில் ’தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை வெளியிட அனுமதிக்கக்கூடாது என உளவுத்துறை தமிழக அரசுக்கு பரிந்துரைத்ததாக நேற்று செய்திகள் வெளியாகின. தமிழகத்தில் இந்த திரைப்படத்தை வெளியிட்டால் கடும் எதிர்ப்புகள் உருவாகும் என உளவுத்துறை எச்சரித்ததாக கூறப்பட்டது. ஆனால் இந்த செய்தி உண்மையல்ல என்று அரசு அதிகாரி ஒருவர் மறுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில் ‘‘தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியாவதற்கு எதிராக சில குழுக்கள் போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன. சமூக ஊடகங்களில் அவர்களின் செய்திகளை எங்கள் புலனாய்வுப் பிரிவு கவனத்தில் கொண்டுள்ளது”
“சில இஸ்லாமிய குழுக்கள் இந்த திரைப்படம் வெளியாவதற்கு தடை கோரி சில மாவட்டங்களில் காவல்துறையை அணுகியுள்ளன. ஆனால் இதுவரை அரசு தடை செய்யவில்லை. கேரளா கூட தடை செய்யவில்லை. எவ்வாறாயினும், மாநிலம் முழுவதும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அனைத்து தரப்பினருக்கும் நாங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளோம்” என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

கேரளாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதாக புலனாய்வு நிறுவனங்கள் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. சில ஆண்டுகள் முன்பாக கேரளாவில் இருந்து ஆண்கள், பெண்கள் என பலர் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்ததை நாம் மறுக்க முடியாது.
அதேசமயம் இந்த திரைப்படம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சில நிபுணர்கள் இந்த திரைப்படத்தில் கூறுவது போல் கேரளாவில் இருந்து 32,000 சிறுமிகள் ஐஎஸ்.ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் சேரச் சென்றுள்ளனர் என்பது உண்மையல்ல. இருந்தாலும் ஐக்கிய நாடுகள் சபை, மத்திய உள்துறை அமைச்சகம், காவல்துறை வட்டாரங்களின் அறிக்கைப்படி ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் சேர இந்தியாவில் இருந்து வெளியேறியவர்களின் எண்ணிக்கை சுமார் 66 என்றும், ஐ.எஸ்.ஐ.எஸ்-க்கு ஆதரவானவர்களின் அதிகபட்ச எண்ணிக்கை 100 முதல் 200 வரை இருப்பதாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

கேரளாவில் பல ஆண்டுகளாக நடக்கும் இந்த கொடூரத்தை ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் மிகைப்படுத்தி காட்டுவதாகவே இருந்தாலும் உண்மையை நாம் ஒருபோதும் மறுக்க முடியாது. பயங்கரவாதிகளின் சதியில் ஒரு பெண் சிக்கி சீரழிந்தாலும் அது பெரும் குற்றம் தான். இந்த குற்றத்தை முற்றிலும் தடுப்பதற்கான நடவடிக்கையில் தான் ஒரு அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். அதை விட்டு விட்டு அரசியல் லாபத்திற்காக திரைப்பட தயாரிப்பாளர்களின் கருத்து சுதந்திரத்தில் தலையிடக்கூடாது.


Share it if you like it