திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 இடங்களில் 4 ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான ஆசிப் ஜாவேத் என்பவன் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டிருக்கிறான்.
திருவண்ணாமலை டவுன், போளூர், கலசப்பாக்கம் ஆகிய பகுதிகளிலுள்ள 4 ஏ.டி.எம். மையங்களில் கடந்த பிப்ரவரி மாதம் 12-ம் தேதி அதிகாலை கொள்ளை நடந்தது. மர்ம கும்பல் கேஸ் வெல்டிங் இயந்திரம் மூலம் ஏ.டி.எம். இயந்திரங்களை வெட்டி, அதிலிருந்த 72.80 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றது. இச்சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு கர்நாடகா, ஹரியானா, குஜராத், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் போலீஸார் விசாரணை நடத்தினர். இது தொடர்பாக 7 பேர் கைது செய்த நிலையில், ஹிரியானாவைச் சேர்ந்த கார் டிரைவர் தஸ்லிம்கான் என்பவனும் கைது செய்யப்பட்டான்.
எனினும், இக்கொள்ளை சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளி மட்டும் சிக்கவில்லை. ஆகவே, போலீஸார் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இந்த சூழலில், ஹரியானா – ராஜஸ்தான் எல்லையான ஆரவல்லி பகுதியில் முக்கிய குற்றவாளி பதுங்கி இருப்பதாக போலீஸாருக்குத் தகவல் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று. அங்கு ஒரு வீட்டில் பதுங்கி இருந்த முக்கிய குற்றவாளியான ஆசிப் ஜாவேத்தை, போலீஸார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.