நீட் தேர்வில் முதலிடம் பிடித்த தமிழக மாணவர் பிரபஞ்சனுக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் :
2023-ஆம் ஆண்டிற்கான நீட் தேர்வில் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரைச் சேர்ந்த மாணவர் பிரபஞ்சன் 720க்கு 720 மதிப்பெண் பெற்று தேசிய அளவில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளார். தேசிய அளவில் முதல் 10 இடங்களைப் பிடித்தவர்களில் நால்வர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவர்களுக்கும் நீட் தேர்வில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் முதலிடம் பிடித்திருக்கிறார்கள் என்பதாலேயே அத்தேர்வை நியாயப்படுத்த முடியாது. தனியார் பயிற்சி மையங்களில் லட்சக்கணக்கில் பணம் செலுத்தி பயிற்சி பெறும் அளவுக்கு வாய்ப்பும், வசதிகளும் உள்ளவர்களுக்கு மட்டுமே நீட் வெற்றி சாத்தியம். கிராமப்புற, ஏழை மாணவர்களுக்கு நீட் வெற்றி இப்போதும் எட்டாக்கனி தான். நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு எப்போது விலக்கு கிடைக்கிறதோ, அப்போது தான் ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி சாத்தியமாகும். அது தான் சமூக நீதிக்கு நிலையான வெற்றியாக அமையும்.