கடந்த 2021 சட்டசபைத் தேர்தலின்போது, உதயநிதி ஸ்டாலின் செங்கலை வைத்து இதுதான் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை என்று மத்திய அரசை கிண்டல் செய்தார். தற்போது அதே பாணியை கையில் எடுத்திருக்கும் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை, இதுதான் மீனவர்களின் வீடு, இதுதான் அக்ரி காலேஜ் என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.
மத்திய பா.ஜ.க. அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்கக் கூட்டம், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் குமரி சங்கமம் என்கிற பெயரில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க. சட்டமன்றக் குழு தலைவர் எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன், எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சிறைப்புரையாற்றிய பா.ஜ.க. தேசியத் தலைவர் அண்ணாமலை, “நரேந்திர மோடி பிரதமராக ஆட்சியில் அமர்ந்து 9 ஆண்டுகள் அற்புதமாக ஆட்சி செய்து விட்டு, 10-வது ஆண்டுக்குள் அடி எடுத்து வைக்கிறார்.
புதிய பார்லிமென்ட் கட்டடத்தின் முன்பு பிரதமர் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கியதை, அமைச்சர் மனோ.தங்கராஜ் மூச்சு இருக்கா? உயிர் இருக்கா? என்று கேட்டார். அவர், அடுத்த தேர்தலில் டெபாசிட் கூட கிடைக்காமல் தோற்றார் என்பதை மக்கள் கொடுக்க வேண்டும். மீனவர்கள் இல்லாமல் எந்த நாடும் வளர்ச்சி அடையாது. மீனவர்களின் தந்தை பாரத பிரதமர் நரேந்திர மோடி. சுதந்திர இந்தியாவில் மீன்வளத்துறை அமைச்சகத்தை உருவாக்கியவர்.
2014 வரை 81 தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் சுடப்பட்டு இறந்திருக்கிறார்கள். கடந்த 9 ஆண்டுகளாக எந்தத் துப்பாக்கிச் சூடும் நடக்கவில்லை. மீனவர்கள் ஆழ்கடலுக்குச் செல்லும்போது உங்கள் படகில் மோடி அமர்ந்திருக்கிறார் என்று நினைக்க வேண்டும். மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்டப்படும் என்று தி.மு.க.வினர் தேர்தல் வாக்குறுதியில் சொன்னார்கள். இந்த செங்கல்தான் அந்த 2 லட்சம் வீடு. (ஒரு செங்கலை எடுத்துக் காட்டினார்).
அதேபோல, தி.மு.க. கொடுத்த 571 வாக்குறுதிகளில் கன்னியாகுமரிக்கு எதுவும் செய்யவில்லை. உடனே, எய்ம்ஸ் எங்கே எனக் கேட்பார்கள். 2026 மார்ச் மாதம் மதுரை எய்ம்ஸ் மக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்படும். உங்கள் தேர்தல் வாக்குறுதி எண் 54-ல், மதுரையில் வேளாண் பல்கலைக்கழகம் அமைப்போம் என்கிற வாக்குறுதி என்ன ஆனது. வேளாண் பல்கலைக்கழகமும் செங்கலாகத்தான் இருக்கிறது. (அக்ரி யுனிவர்சிட்டி என்ற செங்கலை எடுத்துக் காட்டினார்). நீங்க செய்யமாட்டீர்கள், செய்பவர்களையும் செய்ய விடமாட்டீர்கள்” என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.