அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பரனை முற்றுகையிட்ட மக்கள்!

அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பரனை முற்றுகையிட்ட மக்கள்!

Share it if you like it

செங்கல்பட்டு பேருந்து நிலையம் அமைக்க ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்கள் சேகர்பாபு, தா.மோ.அன்பரசன் ஆகியோரை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

செங்கல்பட்டு பேருந்து நிலையம் மற்றும் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை ஆகியவற்றால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு, புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான ஒப்புதலை அளித்திருக்கிறது. இதற்காக, 14 ஏக்கர் பரப்பளவில் சுமார் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு இடம் தேர்வு செய்யும் பணி தொடங்கியது.

அதன்படி, செங்கல்பட்டு அருகேயுள்ள நேதாஜி நகர் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்காக 17 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால், தேர்வு செய்யப்பட்ட அந்த இடத்தில் 52 குடியிருப்புகள் இருக்கின்றன. இது இடையூராக இருப்பதால், மேற்கண்ட குடியிருப்புகளை அகற்றக்கோரி சம்மந்தப்பட்ட நபர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால், அப்பகுதி மக்கள் 40 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு குடியிருப்பதால் வீட்டை காலி செய்ய முடியாது என்று கூறுவதோடு, வீட்டையும் காலி செய்யாமல் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, குறு சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பேருந்து நிலையத்திற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தை இன்று ஆய்வு செய்தனர். அமைச்சர்கள் வந்திருப்பதை அறிந்த நேதாஜி நகர் மக்கள், அவர்களை முற்றுகையிட்டு சாலைமறியலில் ஈடுபட்டனர். மேலும், உருண்டும் புரண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, மாவட்ட எஸ்.பி. சாய் ப்ரனீத் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் விரைந்து வந்து, பொதுமக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், பொதுமக்கள் போராட்டத்தை கைவிடாததால், வேறு வழியின்றி அனைவரையும் கைது செய்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதோடு, பரபரப்பாகவும் காணப்பட்டது.


Share it if you like it