செங்கல்பட்டு மதுபானக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக கேட்டதை தட்டிக்கேட்ட குடிமகனை போலீஸ் அதிகாரி கண்மூடித்தனமாக தாக்கிய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
செங்கல்பட்டு டவுனில் அரசு மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு, நேற்று மதியம் வந்த கல்பாக்கம் அருகேயுள்ள அனுபுரத்தில் பணியாற்றும் 3 இளைஞர்கள் மதுபாட்டில்களை வாங்கிக் கொண்டு, தங்களது இரு சக்கர வாகனத்தில் வைத்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த செங்கல்பட்டு டவுன் போலீஸார் அந்த இளைஞர்களிடம் இருந்து மதுபாட்டிகளை பறித்துக் கொண்டதோடு, இரு சக்கர வாகனத்தையும் பிடிங்கி இருக்கிறார்கள். அதற்கு அந்த இளைஞர்கள் தாங்கள் ஊரில் திருவிழா என்பதற்காக மது வாங்கியதாகவும், தாங்களும் அரசு ஊழியர்கள்தான் எனவும் கூறியிருக்கிறார்கள்.
இதனால் ஆத்திரமடைந்த போலீஸார் எங்களிடமே சட்டம் பேசுகிறாயா? இந்த வண்டி ஏலம் போகும்படி செய்கிறேன் பார் என்று கூறி ஆபாச வார்த்தைகளால் திட்டியதோடு, ஒரு போலீஸ்காரர் மதுபாட்டிலுடன் இரு சக்கர வாகனத்தை பிடிங்கிக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டார். இதனால் ஆத்திரமடைந்த குடிமகன்கள், அங்கிருந்த மற்றொரு போலீஸ்காரர் சூழ்ந்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிர்ந்து போன போலீஸ்காரர் வாகனத்தை எடுத்துச்சென்ற போலீஸ்காரருக்கு போன் செய்து தன்னை பொதுமக்கள் சூழ்ந்து கொண்டு கேள்வி கேட்பதகாக தெரிவித்தார்.
இதையடுத்து, மதுபாட்டிலுடன் திரும்பி வந்த அந்த போலீஸ்காரர், இரு சக்கர வாகனம் மற்றும் மதுபாட்டில்களை அந்த இளைஞர்களிடம் ஒப்படைத்துவிட்டு பொதுமக்களின் நலனுக்காகத்தான் இப்படி நடந்து கொண்டதாகக் கூறி பம்மினர். இச்சம்பவத்தால் டாஸ்மாக் கடை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே அங்கு மதுபானம் வாங்க வந்த மற்றொரு குடிமகன், பொதுமக்களிடம்தான் போலீஸ்காரர்கள் அதிகாரத்தை காட்டுவார்கள், இதோ இந்த மதுபானக் கடையில் ஒவ்வொரு பாட்டிலுக்கும் அரசு நிர்ணயித்த தொகையைவிட கூடுதலாக 10 ரூபாய் வாங்குகிறார்கள். இவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்று போலீஸாரிடம் முறையிட்டார்.
இதனிடையே, மதுக்கடையில் போலீஸாருடன் குடிமகன்கள் வாக்குவாதத்தில் ஈடுபடும் தகவலறிந்து சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் சம்பவ இடத்திற்கு வந்தார். பிறகு, அந்த குடிமகனை கண்மூடித்தனமாகக் தாக்கி துரத்தி அடித்தார். இதனால் ஆத்திரமடைந்த குடிமகன்கள், சட்ட விரோதமாக நிர்ணயிக்கப்பட்ட தொகையை காட்டிலும் அதிக விலைக்கு மது விற்கும் ஊழியர்களை காவலர்கள் கண்டிக்காமல் எங்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். தாக்குதல் நடத்திய காவல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில், போலீஸ் அதிகாரி குடிமகனை தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதைப் பார்த்த பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையும் தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார். அதில், அமைச்சர் மாறினாலும் அவலம் மாறவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறது. இதேபோல், பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியும் தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார்.