கன்வார் யாத்திரை முடித்து விட்டு ஹரித்துவார் திரும்பிக் கொண்டிருந்த பக்தர்கள் வாகனம் உயரழுத்த மின்கம்பி மீது உரசியதில், 5 பேர் உயிரிழந்தனர்.
ஷிரவன் மாதத்தை ஒட்டி, வடமாநிலங்களில் சிவபக்தர்கள் கன்வார் யாத்திரை மேற்கொள்ளவது வழக்கம். அந்த வகையில், ஏராளமான சிவபக்தர்கள் கன்வார் யாத்திரையை முடிந்து விட்டு, கங்கை நதியில் புனிதநீர் சேகரிப்பதற்காக, உத்தர்கண்ட் மாநிலம் ஹரித்துவாருக்கு வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். இவ்வாறு சென்ற வாகனங்களில் ஒன்று உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தின் பலன்பூர் பகுதிக்கு அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, அப்பகுதியில் தாழ்வாக தொங்கிக் கொண்டிருந்த உயர் மின் அழுத்த கம்பியின் மீது எதிர்பாராத விதமாக வாகனம் உரசியது.
இதில் அந்த வாகனத்தில் சென்ற 5 பக்தர்கள் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மின்சாரம் தாக்கி 5 பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் கடும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.