அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசைகாட்டி, விவசாயியை ஏமாற்றி தி.மு.க. நிர்வாகி 17 லட்சம் ரூபாய் மோசடி செய்திருக்கும் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் விரக்தியில் இருக்கும் விவசாயி தலைமைச் செயலகம் முன்பு தீக்குளிக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்.
நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சேர்ந்தவர் மல்லன். 48 வயதாகும் இவர் ஒரு விவசாயி. இந்த சூழலில், அதே பகுதியைச் சேர்ந்த திருப்பதி என்பவர், மல்லனை சந்தித்து அரசு வேலைக்கு ஆட்கள் எடுப்பதாகவும், உனக்கு வேண்டுமா எனவும் கேட்டிருக்கிறார். அதற்கு தனக்கு வயதாகி விட்டதே என்று மல்லன் சொல்ல, அதெல்லாம் பரவாயில்லை. எனக்கு அமைச்சர்களை தெரியும். அவர்களுக்கு கமிஷன் கொடுத்தால் ஈசியா வேலை கிடைத்து விடும் என்று கூறியிருக்கிறார்.
இதை நம்பிய மல்லன், கடந்தாண்டு தனது நிலத்தை விற்று, திருப்பதி மூலமாக சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த தி.மு.க. நிர்வாகி கே.ஆர்.பிரபுவிடம் 16.80 லட்சம் ரூபாய் கொடுத்திருக்கிறார். இதன் பிறகு, ஒரு நட்சத்திர ஹோட்டலில் இன்டர்வியூ நடத்துவதுபோல நடத்தி விட்டு, மல்லன் செலக்ட் ஆகிவிட்டதாகக் கூறியிருக்கிறார்கள். இதை நம்பி மல்லனும் காத்திருக்க, ஓராண்டுகளாகியும் வேலைக்கான ஆர்டர் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த மல்லன், பிரபுவை சந்தித்து பணத்தை கேட்டிருக்கிறார்.
ஆனால், பணம் தராமல் பிரபு இழுத்தடித்ததால் முதல்வர் தனிப் பிரிவுக்கு மனு அனுப்பி இருக்கிறார். இது கே.கே.நகர் காவல்துறைக்கு பரிந்துரை செய்யப்படவே, பிரபு அழைத்து விசாரித்த போலீஸார், அவரிடமிருந்து செக் வாங்கி கொடுத்திருக்கிறார்கள். ஆனால், அந்த செக்கும் பணம் இல்லாமல் திரும்பவே, மீண்டும் பிரபுவை சந்தித்து பணத்தை கேட்டிருக்கிறார். அதற்கு பணம் கேட்டு வந்தால் காரை ஏற்றி கொலை செய்து விடுவதாக மிரட்டி இருக்கிறார் பிரபு. இதனால் விரக்தியில் இருக்கும் மல்லன், தலைமைச் செயலகத்தில் தீக்குளிக்கப் போவதாக தெரிவித்திருக்கிறார்.