சந்திராயன் 3 விண்கலம் செலுத்தப்பட்டது முதல் விண்ணில் பாய்வது வரையிலான காட்சிகளை விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் வீடியோவாக பதிவு செய்திருக்கிறார். இந்த வீடியோவை இஸ்ரோ விஞ்ஞானி ஒருவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட, வீடியோ வைரலாகி வருகிறது.
நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் – 3 விண்கலத்தை இஸ்ரோ கடந்த 14-ம் தேதி விண்ணில் செலுத்தியது. இக்காட்சியை பலரும் தங்களது செல்போன்களில் படம் பிடித்தனர். மேலும், இதை சில தொலைக்காட்சிகள் நேரலையாக ஒளிபரப்பின. அதேபோல, வீடியோ எடுத்தும் வெளியிட்டன. இந்த வீடியோக்கள் அன்றைய தினம் முழுவதும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகின. அதேசமயம், சந்திராயன் – 3 விண்கலத்தை சுமந்துகொண்டு ராக்கெட் (எல்விஎம்-3) சீறிப்பாய்ந்து சென்ற காட்சியை விமானத்தில் இருந்து ஒரு பயணி வீடியோவாக பதிவு செய்திருக்கிறார்.
அதாவது, கடந்த 14-ம் தேதி சந்திராயன் – 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்படுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாக, சென்னையில் இருந்து டாக்கா நோக்கி ஒரு விமானம் புறப்பட்டுச் சென்றது. இந்த விமானத்தின் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்த பயணி ஒருவர், விண்கலம் செலுத்தப்படும் நேரத்தை துள்ளியமாகத் தெரிந்து கொண்டு, விண்கலம் செலுத்தப்படுவதை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்திருக்கிறார். இந்த வீடியோவில் மேகங்களை கிழித்துக்கொண்டு ராக்கெட் சீறிப்பாய்வது தெளிவாக பதிவாகி இருக்கிறது.
இந்த வீடியோ வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து, இந்த வீடியோவை இஸ்ரோ மெட்டீரியல்ஸ் இயக்குநர் (ஓய்வு) மற்றும் ராக்கெட் உற்பத்தி நிபுணர் டாக்டர் பி.வி.வெங்கடகிருஷ்ணன் ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார். இந்த வீடியோ லட்சக்கணக்கான பார்வைகளையும், ஏராளமான லைக்குகளையும் பெற்றுள்ளது. வீடியோவை எடுத்த பயணியின் புகைப்படத் திறமையை சிலர் வியந்து பாராட்டி வருகின்றனர்.