சென்னை சைதாப்பேட்டையிலுள்ள அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை நடத்தி வரும் அமலாக்கத்துறையினர், அவரது காரில் இருந்து முக்கிய டைரியை கைப்பற்றி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டிருக்கிறார்கள். மேலும், பொன்முடியின் விழுப்புரம் வீடு, அவரது மகனும், எம்.பி.யுமான கவுதமசிகாமணி வீடு உட்பட பொன்முடிக்கு தொடர்புடைய 9 இடங்களில் அமலாக்கத்துறையினரின் சோதனை நடந்து வருகிறது. துணை ராணுவப்படை வீரர்கள் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டிருக்கிறார்கள். 2008-ம் ஆண்டு இந்தோனேசியா, ஐக்கிய அரபு நாடுகளில் முறையான உரிமம் பெறாமல் முதலீடு செய்ததாக கூறப்படும் புகாரில் சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீட்டில் சோதனை நடத்தி வரும் அமலாக்கத்துறை அதிகாரிகள், வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த அமைச்சர் பொன்முடியின் காரில் சோதனை நடத்தினர். அமைச்சரின் உதவியாளரை காரை திறக்கச் சொல்லி சோதனை நடத்திய அதிகாரிகள், அதிலிருந்த சில ஆவணங்கள் மற்றும் முக்கிய டைரியை கைப்பற்றி இருக்கிறார்கள். இதுகுறித்து அமைச்சர் பொன்முடியின் உதவியாளரிடம் விசாரித்த அதிகாரிகள், ஆவணங்கள், டைரியிலிருந்த விவரங்கள் குறித்து தீவிர ஆய்வு நடத்தி வருகின்றனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.