திருவண்ணாமலை மகாதீப மலைக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் வைத்த தீயால், அரியவகை மூலிகை செடிகள் தீயில் எரிந்து நாசமாகின.
திருவண்ணாமலையில் சிவனே மலையாக இருப்பதாக ஐதீகம். இங்குள்ள அண்ணாமலை உச்சியில் கார்த்திகை மாதம் திருகார்த்திகை தினத்தன்று மகாதீபம் ஏற்றப்படுகிறது. இதைக் காண தமிழகம் முழுவதும் இருந்து பல லட்சம் பக்தர்கள் குவிவார்கள். சிறப்புமிக்க இந்த தீப மலையில் அரிய மூலிகைச் செடிகள் மற்றும் மான்கள் உள்ளிட்ட விலங்குகள் இருக்கின்றன. இந்த சூழலில், மகாதீப மலையின் இடது பக்கத்தில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இத்தீ மளமளவென்று பரவி சுமார் பல மீட்டர் தூரம் வரை எரிந்தது. தீ விபத்தில் மலையில் உள்ள அரிய வகை மூலிகை செடிகள் எரிந்து நாசமாகின. தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று நள்ளிரவு நேரம் வரை போராடி தீயை அணைத்தனர். இத்தீவிபத்தில் பல ஏக்கரில் இருந்த மரங்கள், மூலிகைச் செடிகள் எரிந்து சேதமாகி விட்டன. மகாதீப மலையில் நேற்று மர்ம நபர்கள் தீ வைத்ததாகக் கூறப்படுகிறது. இது காட்டுத் தீயாக பரவியது தெரியவந்தது.
மலையில் தீ வைத்தவர்கள் யார் என்பது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலையில் புனிதமாக கருதப்படும் அண்ணாமலை மீது தீ வைப்பதை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தி இருக்கின்றனர்.