அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கும்பாபிஷேகத்துக்காக கும்பகோணம் மகாமக குளத்திலிருந்து 21 வகையான புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பட்டது.
அயோத்தியில் ராமர் பிறந்த இடமான ராமஜென்ம பூமியில் புதிதாக ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோயில் கும்பாபிஷேகம் 2024 ஜனவரி 14-ம் தேதி நடைபெறும் என்று ராமஜென்ம பூமி அறக்கட்டளை நிர்வாகம் அறிவித்திருக்கிறது. இதையடுத்து, கோயில் கும்பாபிஷேகத்திற்காக கங்கை, யமுனை, பிரம்மபுத்ரா, காவிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலுள்ள 21 நதியிலிருந்து புனித நீர் 3 கடங்களில் சேகரிக்கப்பட்டது. இக்கடங்கள் கும்பகோணம் காசிவிஸ்வநாதர் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மகாமக குளத்திலிருந்து புறப்பாடு நடந்தது.
சூரியனார் கோயில் வாமதேவ சந்தானம் சிவாக்கிர யோகிகள் ஆதீனம் 28-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகள் மற்றும் மாநகராட்சி மேயர் க.சரவணன் ஆகியோர் கடங்கள் புறப்பாட்டை தொடங்கி வைத்தனர். இந்த புனித நீர் அடங்கிய கடங்கள் ராமேஸ்வரம் செல்கிறது. பிறகு, அக்கோயிலில் பூஜைகள் செய்யப்பட்டு, அங்கிருந்து ரயில் மூலம் அயோத்திக்கு சென்று, ராமஜென்ம பூமி அறக்கட்டளை நிர்வாகிகளிடம் ஒப்படைக்கவுள்ளது.