மாமுல் தர மறுத்ததால், கோவை மாநகராட்சி மேயர் கல்பனாவின் கணவர், தனது தள்ளுவண்டிக் கடையை அகற்றியதாக தி.மு.க. நிர்வாகி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கோவை மணியகாரம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கநாதன். 19-வது வார்டு தி.மு.க. பூத் கமிட்டி பொறுப்பாளராக இருக்கும் இவர், அப்பகுதியில் தள்ளுவண்டிக் கடை வைத்து சாலையோர உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். இவரிடம், கோவை மாநகராட்சி மேயர் கல்பனாவின் கணவர் ஆனந்தகுமார், பொது கழிப்பிடத்தில் கட்டணம் வசூலித்து மாதம் 10,000 ரூபாய் தனக்கு மாமுல் தருமாறும், அதேபோல, இவரது தள்ளுவண்டி கடைக்கு மாதம் 5,000 ரூபாய் மாமுல் தருமாறும் கேட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதற்கு ரங்கநாதன் மறுப்புத் தெரிவித்து விட்டாராம்.
இதனால் ஆத்திரமடைந்த மேயரின் கணவர் ஆனந்தகுமார், ரங்கநாதனின் தள்ளுவண்டிக் கடையை மாநகராட்சி ஊழியர்கள் மூலம் அகற்றி விட்டாராம். மேலும், இதுகுறித்து கலெக்டர் அலுவலகத்தில் புகார் ஒன்றையும் அளித்திருக்கிறார். அதோடு, இவ்விவகராம் தொடர்பாக மாநகராட்சி மேற்பார்வையாளரிடம் ரங்கநாதன் பேசும் ஆடியோவும் வெளியாகி இருக்கிறது. அந்த ஆடியோவில், தள்ளுவண்டியை அதே இடத்தில் நிறுத்தி விட்டதாகவும், தனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று மேற்பார்வையாளர் கூற, பதிலுக்கு என் மீது எந்த புகாரும் இல்லை என்று எழுதித் தந்து விட்டுச் செல்லுமாறு ரங்கநாதன் கூறியிருந்தார்.
கோவை மாநகரில் இந்த விவகாரம்தான் தற்போது ஹாட் டாபிக்காக ஓடிக்கொண்டிருக்கிறது. ஏற்கெனவே, முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களை விமர்சித்து, கோவை மாநகர் மாவட்ட தி.மு.க. செயலாளரும், மாஜி எம்.எல்.ஏ.வுமான நா.கார்த்திக் பேசிய ஆடியோ ஒன்று, கடந்தி இரு தினங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வைரலாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சர்ச்சை அடங்குவதற்குள் கோவை மேயரின் கணவர் மாமுல் கேட்பதாக, தி.மு.க. நிர்வாகி கூறியிருக்கும் ஆடியோ, சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.