சமீபத்தில் தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திமுகவின் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை எதிர்ப்பது போதாது. எப்படி மலேரியா டெங்கு கொரோனா எதிர்க்காமல் ஒழிக்க போராடினோமோ? அதே போல் சனாதனமும் ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று . அதை ஒழிப்பதற்கு அனைவரும் ஒன்றுபட்டு களம் காண வேண்டும் என்று திமுகவின் இந்து விரோதத்தை பொது மேடையில் வைத்து பேசி இருக்கிறார். ஆனால் இந்த நிமிடம் வரை திமுகவின் தலைவராகவோ முதல்வராகவோ அவரது தந்தை ஸ்டாலின் உதயநிதியின் இந்த பேச்சை கண்டிக்கவில்லை.
இந்திய அரசியலமைப்பு சாசனப்படி எந்த ஒரு கட்சியோ அமைப்போ எந்த ஒரு மதத்தையோ நம்பிக்கையையோ இழிவுபடுத்தும் வகையிலோ அவமதிக்கும் வகையிலோ செயல்பட முடியாது . மீறி செயல்பட்டால் அந்தக் கட்சி அமைப்பின் செயல்பாடுகள் தேச விரோத மக்கள் விரோத செயல்பாடுகளுக்காக தடை செய்யப்பட வேண்டும் . அந்த அமைப்பு கட்சிகளின் தலைவர்கள் வேறு எந்த ஒரு கட்சி அமைப்பு துவங்க முடியாத வண்ணம் அவர்களின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதுவே இந்திய அரசியல் சாசன சட்டம் பாரத மக்களுக்கு வழங்கும் சட்ட உரிமை. ஆனால் சுதந்திர இந்திய வரலாற்றில் இதுவரையில் இந்த உரிமைகள் சிறுபான்மை மக்களின் நலனுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறதே தவிர ஒரு நாளும் சட்டங்கள் பெரும்பான்மை மக்களுக்கு இதுவரையில் பாதுகாப்பு வழங்கியது இல்லை . அல்லது வழங்கும் வகையில் அவை பயன்படுத்தப்பட்டது இல்லை.
சிறுபான்மை மக்களின் வாக்கு வங்கி அரசியலுக்காக பெரும்பான்மை மக்களின் நம்பிக்கைகளையும் அவர்களின் வழிபாடுகளையும் கேலி பேசுவதும் அதை ஆமோதித்து பேசுவதும் ஒருவிதமான அரசியல் வியாதியாக நாடும் முழுவதும் மலிந்துவிட்டது. அந்த வகையில் இந்து விரோதம் என்ற ஒற்றை குறிக்கோளுடன் துவங்கப்பட்ட அரசியல் கட்சியான திமுக போன்ற கட்சிகள் அரை நூற்றாண்டு காலம் இந்து விரோதம் இந்திய விரோதம் பேசியே வளர்ந்தது. பார்ப்பனிய எதிர்ப்பு பிராமணிய துவேஷம் இந்து பண்டிகைகள் நம்பிக்கைகள் வழிபாட்டு முறைகளை அவமதிப்பது உள்ளிட்ட அதன் கடந்த கால செயல்பாடுகளே இதற்கு சாட்சி. ராமர் சீதை படங்களை அவமதித்ததால் தான் அடுத்து வந்த தேர்தலில் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்றோம். ராமஜன்ம பூமியை எதிர்ப்பதால் தான் இனியும் வெற்றி பெறப் போகிறோம் என்ற திராவிடர் கழக வீரமணியின் பேச்சு திமுகவின் திராவிடர் கழகமும் இந்து விரோதத்தின் இரண்டு முகங்கள் என்பதன் வெளிப்பாடு.
இதுவரையில் எனது தொகுதியிலேயே நூற்றுக்கும் மேற்பட்ட இந்து ஆலயங்களை இடித்திருக்கிறேன். இதையெல்லாம் இந்து மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியும். ஆனால் இதையெல்லாம் கடந்து தேர்தலில் எப்படி அவர்களின் வாக்குகளை பெற வேண்டும்? என்ற வியூகம் எனக்கு தெரியும். அதனால் அதைப் பற்றியும் கவலை இல்லை என்று பொது மேடையில் திமுகவின் அரை நூற்றாண்டு கால மூத்த நிர்வாகி டி ஆர் பாலு தான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் முன்னாள் மத்திய அமைச்சர் திமுக கட்சியின் பொருளாளர் என்ற பெருமிதத்தோடு பேசியது . ராமர் பாலத்தை தகர்க்க வேண்டும் என்பதற்காக தான் சேது சமுத்திர திட்டத்தை கொண்டு வந்தோம். இனியும் மீண்டும் கொண்டு வருவோம் .நிச்சயம் சேது பாலம் தகர்க்கப்படும் என்று பொது மேடையில் பேசுவது எல்லாம் திமுக எந்த காலத்திலும் மாறாத இந்து விரோத கட்சி என்பதன் வெளிப்பாடு.
இந்து அறநிலையத்துறை என்ற ஒன்றைக் கட்டமைத்து அதன் மூலம் இந்து ஆலயங்களை எல்லாம் அரசாங்கத்தின் பிடிக்குள் கொண்டு வருவதும் ஆலய வருமானங்களை அரசுடமை ஆக்குவதும் ஆலயத்தின் நிர்வாகம் தொடங்கி ஆகமம் வரை அனைத்திலும் இடையூறு செய்வது. என்று இந்து சனாதன எதிர்ப்புக்காகவே ஒரு துறையை கட்டமைத்தது தான் திமுகவின் கடந்த கால அரசியல் வரலாறு. கருப்பர் கூட்டம் என்ற ஒரு காட்டுக் கூட்டத்தை உருவாக்கி அதன் மூலம் தொடர்ச்சியாக இந்து புராணங்கள் பண்டிகைகள் வழிபாட்டு முறைகளை அவமதிக்க செய்வதும் அவற்றையெல்லாம் ஜனநாயகம் கருத்து சுதந்திரம் என்று பாதுகாப்பதும் திமுகவின் அப்பட்டமான இந்து விரோதத்தின் சாட்சியங்கள்
ஒரு மாநிலத்தின் முதல்வர் சிறுபான்மை மக்களின் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு உங்களால் தான் இந்த ஆட்சி வந்தது என்று நன்றி கடன் பேசுவது அவரின் பெருந்தன்மையாக இருக்கலாம். ஆனால் உங்களுக்காக தான் இந்த ஆட்சி என்று பேசுவது எந்த வகையிலான அரசியல் மாண்பு.?
சபாநாயகர் தொடங்கி சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் வரை பலரும் போகும் இடமெல்லாம் பொது மேடைகள் தோறும் இந்து பண்டிகைகளை அவதூறு பேசுவதும் சிறுபான்மை வாக்கு வங்கி அரசியலை கவரும் தந்திரம் என்ற பெயரில் தொடர்ந்து ஒரு சாராரை இழிவு படுத்தி பேசுவதையும் இதுவரையில் மாநில முதல்வராக திமுகவின் தலைவர் கண்டித்ததாக செய்தி இல்லை. ஆனால் இதையெல்லாம் ஜனநாயகம் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் அவர் ஆமோதிப்பதையும் இது போன்ற இந்து இந்திய விரோதிகளை அவர் தொடர்ச்சியாக வளர்த்தெடுப்பதையும் கண்கூடாக பார்க்கிறோம்.
இந்து விரோதம் ஒன்றே அவர்களின் அரசியல் குறிக்கோள் தேர்தல் நேரத்தில் இந்துக்களின் வாக்குகளை கவர இலவசம் வாக்குக்கு பணம் என்ற உத்தி போதும் என்ற நம்பிக்கையில் வெளிப்படையாக மாநில முதல்வரை பல இடங்களில் இந்து மதத்திற்கும் நம்பிக்கைக்கு எதிராக பேசுவதை விமர்சனம் செய்வதை பார்க்கிறோம். இந்துக்களின் திருமண சடங்குகள் முதல் வழிபாடுகள் வரை திருமண நிகழ்ச்சிகளில் எல்லாம் அவர் இந்து மதத்தை துவேசித்து பேசுவதை கண்கூடாக பார்த்து வருகிறோம் .எதிர்க்கட்சியாக இருக்கும் போது மாநிலம் முழுவதும் தாலி அகற்றும் நிகழ்ச்சி என்ற ஒரு நிகழ்ச்சியை திராவிடர் கழகம் மூலம் ஏற்பாடு செய்து இந்து பெண்களின் தாலியை அகற்றி அவமதித்ததை நாடு மறந்துவிடக்கூடாது.
அந்த வகையில் அவர்களின் வழியில் வந்த உதயநிதி இன்று தனது குடும்ப வழக்கப்படி தாத்தாவின் வழியில் தந்தையின் வழியில் தானும் ஒரு இந்து விரோதி என்பதை அப்பட்டமாக நிரூபித்து இருக்கிறார். அதே நேரத்தில் தான் ஒரு கிறிஸ்தவர் என்ற பொது மேடையில் வெளிப்படுத்தியவர் இந்து என்ற அடையாளத்தோடு தேர்தலில் போட்டியிட்டவர். தேர்தல் அரசியலுக்காகவும் ஆட்சி அதிகாரத்திற்காகவும் ஒரு பொய்யான தோற்றத்தை செயல்பாடுகளை உடையவர் என்பதை வெளிப்படையாக அவர் வாயாலயே ஒப்புக்கொண்டு உள்ளார். இவ்வளவு நடந்த பிறகும் இதைப்பற்றி தமிழக பாஜகவோ அல்லது தேசிய பாஜக தவிர்த்து வேறு யாரும் கண்டித்த செய்திகள் இல்லை.
இந்தியாவின் எங்கோ ஒரு மூலையில் ஏதேனும் ஒரு சிறு குற்றம் நடந்தாலும் மோடியின் ஆட்சியில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லை என்று இங்கு ஒன்று கூடும் சிறுபான்மை அமைப்புகள் யாரும் பெரும்பான்மை மக்களின் விரோதமான அரசியலை எடுக்கும் திமுகவை இதுவரை கண்டித்தது இல்லை ஆனால் இதற்காகவே மீண்டும் மீண்டும் திமுகவிற்கு வாக்களிக்க தயாராகிறோம் என்று வெளிப்படையாக இஸ்லாமிய கிறிஸ்தவ சிறுபான்மை அமைப்புகள் அறிவிப்பதை பார்த்திருக்கிறோம்.
சிறுபான்மை நலன் பாதுகாப்பு – மோடி அரசு சிறுபான்மை விரோதி என்று சில்லறை அரசியல் செய்யும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இதுவரையில் இந்த மண்ணின் பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையை அவமதிக்கும் திமுகவை கண்டித்தது இல்லை. ஆனால் ஜனநாயகம் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் முழுமையான ஆதரவை உடன்பாடை அவர்களுக்கு வழங்குகிறார்கள். அரை நூற்றாண்டுகள் இந்தியாவை ஆண்ட கட்சி என்று சொல்லிக் கொள்ளும் காங்கிரசின் தேசிய தலைமையும் மாநில தலைமையும் கூட இதுவரையில் திமுகவின் இந்த இந்து விரோத நிலைப்பாட்டை கண்டித்தது இல்லை. ஆனால் திமுகவை கண்டிக்கும் நபர்களை நோக்கி காங்கிரசின் கண்டனமும் ஜனநாயகத்திற்கு கருத்து சுதந்திரத்திற்கு ஆபத்து பாசிச பயங்கரவாதம் என்ற பெயரில் பாஜகவிற்கு எதிரான கண்டனங்களையும் பார்த்திருக்கிறோம்.
இந்து ஆன்மீகவாதிகளாக இந்திய தேசியவாதிகளாக நாடு முழுவதும் அறியப்பட்ட எம்ஜிஆர் – ஜெயலலிதாவின் வழியில் வந்த அதிமுக கட்சியும் அதன் தலைவர்களும் இந்த நிமிடம் வரை உதயநிதியின் இந்த பேச்சை கண்டிக்கவில்லை. அவரது பேச்சை கண்டிக்காத திமுக தலைவர் மற்றும் முதல்வருக்கு எதிராக இதுவரையில் அவர்களின் ஒரு கண்டன அறிக்கை கூட வெளிவரவில்லை. அந்த வகையில் பாஜக எதிர்ப்பு அரசியல் என்ற வகையில் திமுகவின் அத்தனை இந்து இந்திய விரோதம் நடவடிக்கைகளுக்கும் தற்போதைய அதிமுகவின் தலைவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் துணை போகிறார்கள் என்பதே அப்பட்டமான உண்மை. சிறுபான்மை வாக்குகளை கவர வேண்டும் அதற்காக பாஜக கூட்டணி வேண்டாம் என்று வெளிப்படையாக சொல்லும் அதிமுகவின் தலைவர்கள் யாரும் திமுகவின் இந்த பெரும்பான்மை விரோத பேச்சை இதுவரையில் கண்டிக்காதது அவர்களின் திமுக ஆதரவு நிலைப்பாட்டையும் பாஜக எதிர்ப்பு நிலைப்பாட்டையும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
ஒருபுறம் திமுகவிடமிருந்து தங்களது கட்சியை பாதுகாத்துக் கொள்ள பாஜகவின் துணை அவசியம் என்ற சுயநலத்தோடு பாஜகவின் கூட்டணியில் நீடிப்பது. மறுபுறம் எந்த வகையிலும் பாஜக தமிழகத்தில் காலூன்ற விடக்கூடாது. தேர்தலில் அவர்களை வெற்றி பெற விடக்கூடாது. அந்த வகையில் பாஜக எதிர்ப்பு என்பதற்காக திமுகவுடன் ஒரு ரகசிய கூட்டணி பாஜக எதிர்ப்பு என்பதற்காகவே திமுகவுடன் வைத்த கூட்டணியை பாதுகாக்க அவர்களின் இந்து விரோத இந்திய விரோத செயல்பாடுகளை கண்டிக்காத கள்ள மௌனம் என்று அதிமுக தனது தரம் தாழ்ந்த அரசியலை வெளிப்படுத்தி விட்டது. அந்த வகையில் இங்குள்ள திமுக இந்து இந்திய விரோதி எனில் அதிமுக அப்பட்டமான துரோகி என்பதே கசப்பான உண்மை.
எப்படி தேசிய அளவில் காங்கிரஸ் சிறுபான்மை வாக்கு வாங்கி அரசியலுக்காக தொடர்ச்சியாக பெரும்பான்மை மக்களை பலி வாங்கியதோ? அதே வகையில் தான் தமிழகத்திலும் திமுக அதிமுக கட்சிகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்து இந்து விரோதிய அரசியலை முன்னெடுத்து பெரும்பான்மை மக்களை வஞ்சித்து வருகிறது என்பதை கடந்த கால சமகால அரசியல் நிகழ்வுகள் சொல்லும் உண்மை. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி திமுக அதிமுக காங்கிரஸ் கம்யூனிஸ்ட் விசிக நாம் தமிழர் கட்சி பாமக என்று உதயநிதியின் சனாதன ஒழிப்பு பேச்சிற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் முழு ஆதரவு தந்து கள்ள மவுனம் காக்கும் இந்த கட்சிகளின் இந்து இந்திய விரோதத்தை மக்கள் முன் தோலுரித்து காட்டி தமிழகத்தில் இந்து சனாதன தர்மமும் அதன் வழியில் வாழும் மக்களும் பாதுகாக்க வேண்டும் எனில் அதற்கு பாஜக கட்சியின் வளர்ச்சியும் ஆட்சி அதிகாரமுமே நிரந்தர தீர்வு என்பதை மக்கள் முன் பறைசாற்ற ஒரு நல் வாய்ப்பு தமிழக பாஜகவிற்கு கிடைத்திருக்கிறது. காலம் தந்த இந்த அரிய வாய்ப்பை தமிழக பாஜக சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் . அதற்கு இதர இந்து அமைப்புகளும் கட்சிகளும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதரையும் சிதம்பரம் நடராஜரையும் பீரங்கி கொண்டு தகர்க்கும் நன்னாள் எந்நாளோ ? அன்னாளே என் அரசியல் வாழ்வின் பொன்னாள் என்று பேசியவர் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி. இந்து என்றால் திருடன் என்று பொருள் என்று புது இலக்கண உரை கொடுத்த இந்து விரோதி அவர். இந்துக்களின் திருமண சடங்குகள் வழிபாட்டு முறைகளை தொடர்ந்து அவமதிப்பவர் அவரின் மகன் ஸ்டாலின் .அந்த வழியில் மூன்றாம் தலைமுறை சார்ந்த உதயநிதி இந்து சனாதன தர்மத்தை கொரோனா டெங்கு மலேரியா என்று கிருமிகளோடு ஒப்பிட்டு தனது வம்சத்தின் பெருமையை நிலை நாட்டுகிறார். எத்தனை தலைமுறைகள் மாறினாலும் திமுகவின் இந்து விரோதமும் இந்திய விரோதமோ மாறாது என்பதை கருணாநிதியின் வம்சமாக அவர் நிரூபித்திருக்கிறார். இதுவரையில் இதை கட்சியின் தலைமையோ இதர கூட்டணி கட்சிகளோ கண்டிக்காத வகையில் அவர்கள் அனைவருமே திமுகவின் இந்த இந்து விரோத நடவடிக்கையில் கூட்டாளிகள் என்பதை ஒப்புக்கொள்கிறார்கள்.
ஆனால் பாஜகவின் கூட்டணியில் இருக்கும் அல்லது வர இருக்கும் அதிமுக பாமக உள்ளிட்ட பல கட்சிகளும் கூட இந்த விஷயத்தில் மௌனம் காப்பது தமிழகத்தில் பாஜகவின் கூட்டணியில் இருக்கும் கட்சிகளிலேயே இந்து விரோதமும் திமுக ஆதரவு நிலைப்பாடும் வேரூன்றி இருக்கிறது என்பதற்கு சாட்சியம். அந்த வகையில் தனது அரசியல் சித்தாந்தங்களையும் கட்சியின் கொள்கை கோட்பாடுகளையும் உறுதியாக நிலை நிறுத்தவும் அதற்கு இணக்கமான வகையில் தேர்தல் கூட்டணியை இறுதி செய்ய வேண்டிய அவசியம் தமிழக பாஜகவிற்கு ஏற்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இருக்கும் இந்து விரோதத்தை ஒரு மாநிலத்தின் கட்சி அரசியலாக பார்க்காமல் சித்தாந்த அடிப்படையிலான எதிர்ப்பாக தேசிய முழுவதும் கொண்டு போய் சேர்க்கும் தேசிய பாஜகவின் தலைமை அதே நிலைப்பாட்டை தனது தேர்தல் கூட்டணியையும் முடிவு செய்ய வேண்டும் என்பதே பாஜகவின் மீது இங்குள்ள இந்து இந்திய அபிமானிகள் வைத்திருக்கும் எதிர்பார்ப்பு .தேசிய பாஜகவும் தமிழக பாஜகவும் அதை உணர்ந்து செயல்படுவதே எதிர்காலத்தில் தேச நலனுக்கும் பாஜகவின் கட்சிக்கும் தேர்தல் வெற்றிக்கும் உகந்ததாக இருக்கும்.