சனாதன தர்மம் – மதமல்ல

சனாதன தர்மம் – மதமல்ல

Share it if you like it

ஹிந்து சனாதன தர்மம் என்பது பாரதத்தில் பிறந்து உலகெங்கும் வளர்ந்த உன்னதமான வாழ்வியல் தர்மம். சனாதனம் மத அடையாளம் அல்ல. மானுட வாழ்வியலுக்கான வழிகாட்டும் நெறிமுறை. அந்த வகையில் உலகில் உள்ள மானுடம் நலம் பெறவும் பிரபஞ்சத்தின் உயிர்கள் யாவும் உய்யவும் உயர்ந்த வழிகாட்டும் நெறிமுறைகளை தந்தட்ட வாழ்வியல் முறைதான் சனாதன தர்மம் என்னும் உயர்ந்த ஆன்மீக நெறி. பஞ்சபூதங்களை உள்ளடக்கிய பிரபஞ்ச அறிவியலின் உன்னதம் உணர்ந்து அதன் மகத்துவமான வாழ்வியலை தானும் வாழ்ந்து உயிர்கள் அனைத்தையும் வாழ வழிகாட்டுவதே சனாதன தர்மம் . இந்த தர்மம் உணர்ந்து வாழ்பவர்கள் தாமும் வாழ்ந்து பிறரையும் வாழ்வித்து உலகில் உன்னத பிறவிகளாக உதாரண புருஷர்களாக வரலாற்றில் தேசியவாதிகளாகவோ ஆன்மீகவாதிகளாகவோ நீங்கா இடம் பிடித்திருப்பார்கள். இந்த சனாதன தர்மத்தின் மகத்துவம் உணராது இதை இழிப்பதையும் படிப்பதையும் தொழிலாக கொண்டவர்கள் அன்றைக்கு வெற்றி வாகை சூடி இருந்தாலும் பின் நாளில் பெரும் வீழ்ச்சியும் சரிவையும் அவர்களும் அவர்களின் வழிவந்தவர்களும் எதிர்கொண்டு வரலாற்றில் நீங்கா பழிக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

ஆயிரம் ஆண்டுகள் தொடர் கொள்ளை கலாச்சார ஆக்கிரமிப்பு அடிமைப்பட்ட வாழ்வியல் என்ற அத்தனையும் கடந்து நிற்கும் பாரதம் ஒரு புறம் .யுத்த நியதிகளை மீறி தொடர்ந்து பாரதத்தை சூறையாடி அதன் மண்ணையும் மக்களையும் ஆக்கிரமித்து சொல்லொணா கொடுமைகளை நிகழ்த்திய கொடூரர்களின் சொந்த நாடும் அந்த மக்களும் சீரழிவின் விளிம்பில் நிற்கும் இன்றைய அவலம் மறுப்புறம். இரண்டையும் சீர்தூக்கி பார்ப்பவர்களுக்கு சனாதனத்தின் உன்னதமும் புரியும். அதை அழிக்க நினைத்தவர்கள் அழிந்த விதமும் அந்த வினைகள் தொடர்ந்து இன்றும் அவர்களின் சந்ததிகள் அழிந்து வரும் உண்மையும் புரியும்.

உலகில் உள்ள கிறிஸ்தவர்கள் எல்லாம் ஒற்றை தலைமையாக ஏற்று பணிந்து வணங்கும் போப் ஆண்டவர் இந்துஸ்தானத்திற்கு வருகை தந்த போது விமானத்தில் இறங்கிய அடுத்த கணம் ஹிந்துஸ்தானத்தின் பூமியை விழுந்து வணங்கி முத்தமிடுகிறார். மாற்று மதம் சார்ந்தவர் ஆயினும் பாரதத்தின் உன்னதமும் இந்து சனாதனத்தின் மகத்துவமும் அவர் உணர்ந்ததன் வெளிப்பாடு அவரது அந்த உச்சபட்ச மரியாதை.

உலகின் எண்ணெய் வளம் மிகுந்த நாடு. பொன் கொழிக்கும் பொருளாதாரம் இருக்கும் பஹ்ரைன் நாட்டின் அதிபர் தனது குட்டி தேசத்தின் நடுவே பிரம்மாண்டமான மிகப்பெரிய சிவாலயத்தை கட்டி எழுப்பி இருக்கிறார். அதன் கும்பாபிஷேக விழா அரச குடும்பத்து ராஜ மாதா சைவ நெறிகளின் உன்னத நூலான தேவார திருவாசகங்களை தனது தலையின் மீது சுமந்து வந்து மரியாதை செய்கிறார். ஒட்டுமொத்த அரபி அரசு குடும்பமும் ஆலய வழிபாட்டில் சிரத்தையோடு பங்கேற்று வாழை இலையில் அறுசுவை சைவ உணவை உண்டு மகிழ்கிறார்கள்.

சூரியன் அஸ்தமிக்காத தேசம் ஆயிரம் ஆண்டுகள் இந்தியாவை அடிமைப்படுத்தி ஆண்ட தேசம் என்ற பெருமைக்குரிய பிரிட்டன் அரச பரம்பரை உபயத்தில்தான் லண்டன் மாநகரின் லட்சுமி நாராயண சுவாமி ஆலயம் இன்றும் சீர் பெறுகிறது. தீபாவளி திருநாளில் சுவாமிக்கு கங்கை நீர் பாரதத்தில் இருந்து கொண்டு போய் சிறப்பு அபிஷேக ஆராதனையை பிரிட்டன் நாட்டு பிரதமர் முன்னின்று தொடங்கி வைக்கிறார்.

அமெரிக்காவில் இரண்டு முறை பிரதமர் பதவி வகித்த பராக் ஒபாமா அவரது நலன் விரும்பிகள் நண்பர்கள் வழிகாட்டுதலில் ஒரு சிறு அனுமன் வெண்கல சிலையை தனது சட்டை பையில் வைத்திருக்க தேர்தலில் அரசியலில் கடினமான சூழ்நிலைகளைக் கடந்து வந்த பிறகு அதன் உன்னதம் உணர்ந்தவர் நிரந்தரமான ஹனுமன் பக்தர் ஆகி எந்நேரமும் அனுமன் சிலை துளசி மாலை அனுமன் சாலிசா புத்தகத்தோடு வலம் வருகிறார் அதை அவரின் மனைவி பெருமையோடு பதிவு செய்கிறார்.

உலகில் பெரியண்ணன் அந்தஸ்தோடு இருந்த அமெரிக்காவின் வலிமையான அதிபராக இருந்த பில் கிளின்டன் தனது மனைவி ஹிலாரியுடன்அரசு முறை சுற்றுப் பயணமாக வந்தபோது பஞ்சகச்ச வேட்டி அணிந்து அவரது மனைவி பாரம்பரியமான இந்திய பட்டுச் சேலை அணிந்து இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் தம்பதியராக கழுத்தில் மாலை நெற்றியில் மங்கல திலகம் அணிந்து திவ்ய தம்பதிகளாக கலந்து கொண்டு சிறப்பு செய்தார்கள். காசி – வாரணாசி உள்ளிட்ட கோவில் பிரசாதங்களை பக்தியோடு பவ்யமாக பெற்றுக்கொண்டு மரியாதை செய்தார்கள்.

உலகின் கோடிக்கணக்கான ரசிகர்களின் அதிரடி நாயகனாக விளங்கும் ஸில்வர் ஸ்டோன் ஸ்டாலியன் அகால மரணம் அடைந்த தனது மகனின் ஆத்ம சாந்தி வேண்டி பாரதத்தின் காசி கயா ஹரித்வார் உள்ளிட்ட முக்தி தலங்களில் சனாதன தர்ம வழிமுறையில் முன்னோர் வழிப்பாட்டிற்கான திதி தர்ப்பண பூஜையை செய்து போனார் . அதன் பிறகு மன அமைதி அடைந்ததாகவும் இந்து நண்பர்களின் உதவியோடு ஆண்டுதோறும் தனது வீட்டிலேயே முன்னோர் பூஜையை முன்னெடுப்பதாகவும் நெகிழ்ச்சியோடு பதிவு செய்கிறார்.உலகின் அசைக்க முடியாத வல்லரசு எதிரிகளின் சிம்ம சொப்பனம் என்று சொல்லும் இஸ்ரேலிய நாட்டில் வேத மந்திரங்கள் முழங்க நமசிவாய கோஷத்தோடு ஹோமங்கள் நடைபெறுகிறது. நெருக்கடி காலத்தில் தங்களுக்கு அபயம் அளித்த பாரதத்தையும் அதன் உன்னதமான தர்மத்தையும் மதித்து நன்றி வழிபாடு செய்கிறது.

பாரதத்தையும் அதன் தர்மத்தையும் அடிமைப்படுத்தி ஆள வேண்டும் என்ற கங்கணம் கட்டி திரிந்த கம்யூனிச சீனா கூட கொரோனா காலத்தில் சனாதன தர்மத்தின் முன் மண்டியிட்டு விட்டது. கொரோனா நோய் பரவ காரணமான கிருமிகள் காற்றின் மூலம் பரவுவதை தடுக்கவும் குறிப்பிட்ட கிரக அடிப்படையில் வரும் இந்த பரவலுக்கு தீர்வும் வேண்டி வேதம் மந்திரங்கள் முழங்க சிறப்பு ஹோமங்கள் பூஜைகள் செய்து விண்வெளியில் உலங்கு வானூர்தியில் பறந்தபடி புண்ணிய நீரை தேசம் முழுவதிலும் தெளித்து விமோசனம் வேண்டி நின்றது.

உலகின் அடுத்த காலிபாவில் நானே முதல் நபர் என்று தொடை தட்டும் சவுதி அரேபிய நாட்டில் நோயுற்ற மன்னரின் நலன் வேண்டி கன்னட மாநிலத்திலிருந்து ஒரு வேத விற்பன்னர் குழுவை அழைத்துப் போய் ஆயுள் ஹோமம் செய்கிறார்கள். பசுவையும் கன்றையும் அழைத்துப் போய் கோ பூஜை செய்து கோதனம் வழங்கி பரிகாரம் வேண்டுகிறார்கள். ஒட்டுமொத்த அரச குடும்பமும் சாதாரண மனிதர்களாக பூஜையில் வழிபாட்டில் பங்கேற்கிறார்கள்.

ஆனால் உலகெங்கிலும் இருந்து மதமாற்றம் – பிரிவினை வாதம் என்ற பெயரில் தூண்டிவிடும் அமைப்புக்களின் மூலம் பணம் பெற்று அதன் மூலம் கட்சியும் அரசியலும் அமைப்புகளையும் முன்னெடுக்கும் அறிவிலிகள் தங்களை இந்து – இந்திய விரோதிகளாக நிலை நிறுத்திக் கொள்வதற்காக சனாதன ஒழிப்பு எதிர்ப்பு என்ற பெயரில் வெற்றுக் கூச்சல் போட்டு அவர்களின் இருப்பை உறுதிப்படுத்துகிறார்கள். அதன்மூலம் இங்கு உள்ள சிறுபான்மை மக்களை மனம் குளிரச் செய்து அவர்களின் வாக்குகளை மொத்தமாக கவர்ந்து தங்களின் அதிகாரத்தை நிலை நிறுத்திக் கொள்ளலாம் என்று நப்பாசையில் சட்டத்தையும் மீறி தர்மத்தையும் மறந்து ஒரு குறிப்பிட்ட சாராரை தொடர்ந்து அவமதிக்கிறார்கள்.

ஆனால் அவர்களின் வழியில் வந்த முன்னோர்களே கடந்த காலங்களில் ராமன் எந்த கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்றான்? அவன் எப்படி பாலம் கட்டமைத்தான்? என்று பேசி இறுதியில் அதே ராமனின் அனுஜனாக பூமியில் அவதரித்த ஒரு பெரும் மகானின் வாழ்க்கை வரலாற்றை நெடுந்தொடராக சமர்ப்பித்து இராமானுஜன் இடம் பூரண சரணாகதி அடைந்தவர்கள் என்பதை இங்கு உள்ள யாவரும் அறிவார்கள்.

இவர்கள் எந்த தலைவரை முன்னிறுத்தி அவரின் வழியில் சனாதனத்தை எதிர்க்கிறோம் என்று இந்த மண்ணின் தர்மத்தை பழிக்கிறார்களோ ? அந்த தலைவரும் தனது வாழ்நாளில் இறுதி கட்டத்தில் உடல் உபாதைகளுக்காக நிவாரணம் வேண்டி அதே கடவுளரின் பெயர்களை உச்சரித்த வரலாறுகளையும் நாம் பார்த்து வருகிறோம்.

மக்களிடம் இந்த விழிப்புணர்வு வரவேண்டும் எனில் இந்து சனாதன தர்மம் என்பது வெறும் மதம் சார்ந்த நெறிமுறை அல்ல அது மானுடத்திற்கான வாழ்வியல் என்பதை அதன் வழியில் வாழ்ந்து மக்களை நல்வழிப்படுத்திய ஆன்மீகப் பெரியவர்கள் வரலாற்று புருஷர்களின் தியாகங்களை முன்னிறுத்தி உரிய வகையில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய வேண்டும் .அதை செய்ய வேண்டிய பொறுப்பும் கடமையும் இங்குள்ள ஆன்மீகவாதிகளுக்கும் தேசியவாதிகளுக்கும் நிரம்ப இருக்கிறது. அவர்களை ஒருங்கிணைத்து வழி நடத்தி ஒரு மாபெரும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டிய கடமை இந்து தர்மத்தின் வழியில் சித்தாந்தங்களை முன்னிறுத்தி நடக்கும் பாஜக உள்ளிட்ட தர்ம நெறி சார்ந்த கட்சிகளுக்கும் அதன் ஆதரவு அமைப்புகளுக்கும் நிரம்ப இருக்கிறது.

அவசர அவசியம் கருதி இந்து சனாதன தர்மம் பற்றிய விஷம பிரச்சாரங்களையும் திட்டமிட்ட விஷமிகளின் பொய் பிரச்சாரங்களையும் முறியடிக்க இந்து சனாதன தர்மம் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் சனாதன தர்ம பாதுகாப்பு அவசியம். ஏன் அவசரம் ? என்பதையும் அது ஒன்றே மக்களையும் மண்ணையும் தர்மத்தின் வழியில் நடத்திச் செல்லும் என்பதையும் இங்குள்ள ஒவ்வொருவரும் உணர செய்ய வேண்டும் .அதற்கு தானும் வாழ்ந்து பிறரையும் வாழ்விக்க வேண்டும் என்ற நல்லெண்ணம் படைத்த ஒவ்வொருவரும் இங்கு துணை நிற்க வேண்டும்.

உலகின் மிகக் கொடூரமான விலங்காக அறியப்பட்ட டைனோசர் படிமங்களை இன்று அருங்காட்சியகங்களின் மட்டுமே பார்க்க முடியும். ஆனால் உலகின் பரம சாதுவான விலங்கு என்று சொல்லப்படும் யானையும் பசுவையும் இன்று உலகம் முழுவதிலும் வனங்கள் சமவெளிகள் ஆலயங்கள் என்று எல்லா இடங்களிலும் பார்க்க முடியும் . தெய்வம்சமாக அவற்றை இன்றளவும் மக்கள் போற்றி பாதுகாப்பதை வழிபடுவதை உலகெங்கும் பார்க்க முடியும்.ஆக்கிரமிப்பு அராஜகத்தில் இருந்த எதுவும் இந்த உலகில் நிலை பெற்றதில்லை. தர்மத்தின் வழியில் பரம சாதுவாக பவித்திரமான நடையில் வாழ்ந்த எதுவும் இங்கு அழிந்ததும் இல்லை. இயற்கையின் இந்த நியதியை உணராத அறிவிலிகள் மட்டுமே சனாதன எதிர்ப்பை பேச முடியும். ஹிந்து சனாதனம் என்பது யாரோ ஒருவர் கட்டமைத்து வகுத்த சூத்திரம் இல்லை. நினைத்தவுடன் வெட்டி எறிவதற்கும் அழிப்பதற்கும் அவரவர் வீட்டில் இருக்கும் வாழை மரம் இல்லை. இந்து சனாதன தர்மம் என்பது உலகின் மானுட தர்மம். மானுடம் தெய்வீகத்தின் மாண்பை உணரச் செய்யும் ஆன்மீக தர்மம். இவ்வுலகின் பிறப்பே சனாதனத்தில் இருந்து தான் தொடங்குகிறது. அவ்வழியில் இவ்வுலகின் மோட்சமும் சனாதனத்திலேயே அடங்கும். சனாதனம் உள்ளவரை மட்டுமே இந்த பிரபஞ்சமும் இயங்கும். சனாதனத்தின் உயிர்ப்பு உலகின் உயிர்ப்பு . சனாதனத்தின் அழிவு இந்த உலகின் பேரழிவு. இதை உணராத தற்குறிகள் மட்டுமே சனாதன எதிர்ப்பு அழிப்பு பேச முடியும்.


Share it if you like it