ஜீன்ஸ் டி-ஷர்ட் லெக்கின்ஸ் உள்ளிட்ட ஆடைகளை அணிந்து ஆலய பிரவேசம் செய்வதை அனுமதிக்க முடியாது என்று உயர் நீதிமன்றம் தெரிவிக்கிறது . .இது தீர்ப்பானையாக மாறும் போது மட்டுமே ஆன்மீகவாதிகளின் மனம் அமைதி அடையும். ஏனெனில் கடந்த காலங்களில் இது போன்ற வழக்குகள் தொடரப்பட்ட,போது மேற்கத்திய ஆடை அணிந்து வருபவர்களுக்கு ஆலய பிரவேசம் செய்ய, அனுமதி இல்லை என்ற தீர்ப்பை வழங்கியபோது தனிமனித சுதந்திரம்- ஆடை சுதந்திரம் என்று திரும்பிய பக்கமெல்லாம் போர்க்கொடி உயர்ந்தது. அந்த தீர்ப்பும் மேல்முறையீடு என்ற பெயரில் காணாமல் போனது.
மாற்று மத தலங்கள் என்று வரும்போது வழிபாட்டுத் தலங்களின் மாண்பு என்று பேசுபவர்கள் இந்து மத வழிபாட்டுத்தலங்கள் என்று வரும்போது மட்டும் ,தனி மனித சுதந்திரம்- பெண்ணியம் என்று பேசுவது எப்பேர்ப்பட்ட மத துவேஷம் ?.
உங்களால் கேரளம்- கர்நாடகத்தில் இருக்கும் எந்த ஒரு இந்து ஆலயத்திலும் பாரம்பரிய ஆடை இல்லாமல் ஆலய பிரவேசம் செய்ய முடியாது. சில ஆலயங்களில் ஆண்கள் மேலாடை இல்லாமல் தான் கருவறை தரிசனம் செய்ய முடியும். ஆந்திரம்- தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் எந்த ஒரு பிரசித்தி பெற்ற ஆலயங்களிலும் நீங்கள் ஜீன்ஸ் -லெக்கின்ஸ் அணிந்து ஆலய பிரவேசம் செய்ய முடியாது. ஸ்ரீ காளஹஸ்தி – லேபாக்ஷி உள்ளிட்ட ஆலயங்களில் நீங்கள் எவ்வளவு செல்வாக்கு பொருந்திய நபராக இருந்தாலும், நம் பாரம்பரிய உடையும் பரிகார பூஜைகளின் நியதிக்கு உட்பட்டு இருந்தால் மட்டுமே பரிகார பூஜைகளுக்கு அனுமதிக்கப்படுவீர்கள். அங்குள்ள ஆலயங்களில் உள்ளே ஒளிப்படம்- காணொளி எடுக்க அனுமதி இல்லை. வட மாநிலங்களிலும் இதே ஒழுங்கு முறை உண்டு.
தமிழகத்திற்கு வெளியே இருக்கும் எந்த ஒரு ஆலயத்திலும், கைலி -அரைக்கால் சட்டை அணிந்தோ , தலைவிரி கோலத்தில் இருக்கும் பெண்களோ ஆலய தரிசனம் செய்ய முடியாது. பெரும்பாலும் அலைபேசிக்கு அனுமதி இல்லை. ஆனால் தமிழகத்தில் எந்த ஒரு ஆலயத்திலும் பரிகார பூஜைகள் கடந்து , கோவிலின் கும்பாபிஷேக யாகசாலையில் கூட நீங்கள் குழாய் – சட்டை அணிந்தபடி பூஜை செய்ய முடியும். ஜீன்ஸ் -லெக்கின்ஸ் மட்டும் அல்ல, தொடை தெரியும் உடை அணிந்து கூட பெண்கள் ஆலயத்தை வலம் வர முடியும். பரிகார பூஜை கூட செய்ய முடியும். தலைவிரி கோலத்தோடு கருவறை வரை போக முடியும்.
சில ஆலயங்களில் பாரம்பரிய ஆடைகள் அணிந்து வந்தால் மட்டுமே ஆலய பிரவேசம் செய்ய அனுமதி என்று ஒரு பதாகை இருக்கும். ஆனால் அதை யாரும் சட்டை செய்வதும் இல்லை. மீறுபவர்களை கேள்வி கேட்க அங்கு நாதியும் இல்லை. இதிலும் கொடுமை சில ஆலயங்களில் கைலி- அரைக்கால் சட்டை உள்ளிட்ட ஆடைகளோடு ஆலய பிரவேசம் செய்ய அனுமதி இல்லை என்று அறிவிப்பு பலகை வைத்திருந்தாலும் அதை மீறி அழிச்சாட்டியம் செய்பவர்கள் ஏராளம்.
பரிகார ஷேத்திரங்களின் அந்த பரிகாரங்களை செய்வதற்கும் அதற்குரிய பூஜை நேரங்களுக்கும் குறிப்பிட்ட நேரம் -விதி என்று தெளிவான வரையறையில் அறிவிப்பு பலகை இருக்கும். ஆனால் அதை மீறி தங்களின் அரசியல் செல்வாக்கு- அதிகார பலம் பயன்படுத்தி அங்கிருக்கும் அர்ச்சகர்களை வலுக்கட்டாயமாக தங்களின் வசதிக்கேற்ப பூஜை செய்ய வைக்கும் அக்கிரமும் தமிழகத்தில் மட்டுமே நீங்கள் பார்க்க முடியும். ஆகம விதிகளின்படி சில ஆலயங்களில் நடை சாற்றும் வழக்கம் ஒரு மரபு வழியாக இருக்கும். ஆனால் அதைக் கூட தங்களின் அதிகார துஷ்பிரயோகம் மூலம் வலுக்கட்டாயமாக மாற்றியமைக்கும் அதிகார வர்க்கமும் இங்கு மட்டுமே பார்க்க முடியும்.
ஆலயங்களில் பாரம்பரிய உடை அணிந்து பிரவேசிக்க வேண்டும். பாரம்பரிய உடை அணியாதவர்களுக்கு கருவறை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட கூடாது என்ற கடந்த கால அரசாணை பகுத்தறிவு முற்போக்கு வாதம் என்று உதாசீனம் செய்தார்கள். இதன் மூலம் திட்டமிட்டு இந்து ஆலயங்களில் கலாச்சார சீரழிவை புகுத்தினார்கள் . தற்போது பெருகிவரும் ஆன்மீக பற்றுதல் விழிப்புணர்வு காரணமாக ஆலயங்களில் பாரம்பரிய உடை என்னும் இந்த கருத்தை நீதிமன்றங்களும் ஏற்றுக் கொள்கிறது. ஆமோதிக்கிறது. ஆனால் தீர்ப்புகளாக வழங்கி அதை கட்டாயமாக அமல்படுத்தாத வரையில் இங்குள்ள ஆலயங்கள் சீரழிவை எதிர்கொள்ளும். ஒருவேளை நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கினாலும் இந்த நீதிமன்ற தீர்ப்புக்களை கூட முறையாக பின்பற்றாத இந்து அறநிலையத்துறையால் தமிழகத்தில் உள்ள இந்து ஆலயங்களின் சீரழிவு தொடர்கிறது.
தமிழகத்தின் வெளியே எல்லா இடங்களிலும் அங்குள்ள அரசுகள் தங்களுக்கு இந்து மத ஆலயங்களின் மேல் நம்பிக்கை இல்லாவிட்டாலும் கூட அரசுக்கு பெரும் வருவாய் தரக்கூடிய வழிபாட்டுத்தலங்கள் இவற்றை சரியான முறையில் பராமரித்தால் தான் மக்கள் கூட்டம் வரும் அரசுக்கும் வருவாய் வரும் என்ற குறைந்தபட்ச பொறுப்பையாவது கடைப்பிடிப்பதால் அங்குள்ள கோவில்கள் எல்லாம் ஓரளவு தங்கள் மாண்பை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் தமிழகத்தில் இருக்கும் இந்து மதத்தில் மட்டும் நம்பிக்கை இல்லாத, இந்துமத வழிபாட்டுத் தலங்களை மட்டும் ஆக்கிரமிக்கும் அரசுகளுக்கு அதன் சொத்துக்கள், – வருவாய் வேண்டும் ..ஆனால் அந்த ஆலயங்கள் கூடிய மட்டும் இருந்த இடம் தெரியாமல் போக வேண்டும் என்ற ஒரே இலக்கோடு பயணிப்பதால் ஆலயமும் ஆலய வழிப்பாடும் மட்டுமல்ல, ஆலயத்திற்கு வழிபாடு செய்வதற்கென்று இருக்கும் குறைந்தபட்ச நியதிகள் கூட இங்கு பின்பற்றப்படுவதில்லை.
ஆங்காங்கே, பரவலாக, இருக்கும் ஆன்மிக அடியார்களின் கடுமையான மனக்குமுறலும் ஒரு சிலரின் எதிர்வினைகளும் சட்ட நடவடிக்கைகளாக நீதிமன்றத்தின் கதவுகளை தட்டும் போது எப்போதாவது இதுபோன்றதொரு நல்ல கருத்துக்களை இறையருளால் நீதிமன்றமும் உதிர்த்து வருகிறது.
இந்தக் கருத்து தீர்ப்பாக மாறி ஆலயங்களை கட்டுப்படுத்தும் அறநிலையத்துறை அதை நியாயமாக அமல்படுத்துகிறதா? என்பதை கண்காணித்து இது போன்ற விஷயங்கள் உண்மையில் பாரபட்சம் இன்றி நடைமுறைக்கு வரும்போது மட்டுமே இங்குள்ள ஆலயங்கள் அதன் மாண்பை மீட்டெடுக்க முடியும்.
ஆலயமும் அதன் மாண்பும் எங்கள் உயிரினும் மேலானது அது பாதுகாக்கப்பட வேண்டும் .