வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த ஓனான் குட்டை கிராமத்திலிருந்து 40-க்கும் மேற்பட்டவர்கள் இரண்டு வேன்களை அமர்த்திக் கொண்டு கர்நாடக மாநில தர்மசாலாவிற்கு 2 நாள் சுற்றுலாவாக போயிருக்கிறார்கள். திங்கள் அதிகாலை அவர்கள் கர்நாடக மாநிலத்திலிருந்து பேர்ணாம்பட்டிற்கு திரும்பி வந்த வேளையில் நாட்றம்பள்ளி அடுத்த பஞ்சராகி நடு சாலை சென்னை பெங்களூர் நெடுஞ்சாலை பகுதியில் அதிகாலை 3 மணி அளவில் சாலையில் அவர்களின் வாகனத்தை நிறுத்திவிட்டு. ஒரு சிறு ஓய்வில் இருந்திருக்கிறார்கள். அந்த வழியே அதிவேகமாக வந்த ஒரு வேன் வந்த வேகத்தில் அங்கு அமர்ந்திருந்தவர்கள் மீது மோதியதில் ஏழு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார்கள் . 14 பேர் படுகாயங்களுடன் அருகில் உள்ள வாணியம்பாடி திருப்பத்தூர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அதிகாலை நேரம் என்பதால் ஓட்டுநருக்கு ஓய்வு தர வேண்டும் என்பதற்காக இவர்கள் சாலை ஓரத்தில் வேனை நிறுத்திவிட்டு தேநீர் மற்றும் கழிவறை என்று ஒரு சிறு ஓய்வு எடுத்திருக்கலாம் . அதிகாலை வேளையில் அதி வேகமாக பயணித்த வேன் வந்த வேகத்தில் மோதியதில் பெரும் உயிர் சேதம் ஏற்பட்டிருக்க கூடும். இந்த விபத்தில் ஓணான் குட்டை கிராமத்தை சேர்ந்த 7 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்கள். இந்த விபத்திற்கு தமிழக முதல்வர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூபாய் 50,000 நிவாரணம் அறிவித்துள்ளார். இந்த விபத்துக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் மற்றும் படுகாயமடைந்த மக்கள் விரைவில் நலம் பெற தனது பிரார்த்தனையும் தெரிவித்துள்ளார். மேலும் மத்திய அரசு சார்பில் உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூபாய் 50,000 நிவாரணம் அறிவித்துள்ளார்.
சாலை ஓரங்களில் இருக்கும் உணவகங்கள் ஒய்வறைகளின் கட்டண கொள்ளை காரணமாக சரக்கு போக்குவரத்து வாகன ஓட்டிகள் மற்றும் சாமானிய மக்கள் தொலை தூர பயணங்களில் சாலை ஓரத்தில் வாகனங்கள் நிறுத்தி ஓய்வெடுக்க வேண்டிய நிலை. ஓட்டுனர்களாக பயணிக்கும் ஓட்டுநர்களும் அவர்களின் உதவியாளர்களும் கூட நெடுஞ்சாலைகளில் இருக்கும் உணவகங்கள் கழிவறைகளின் கட்டணங்களுக்கு பயந்து இதுபோல சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்திவிட்டு ஓய்வு எடுக்க வேண்டிய சூழலில் நிலவுகிறது. உணவு குடிநீர் என்று தேவையான ஏற்பாடுகளை கையோடு கொண்டு வருபவர்களுக்கு கழிவறை வசதிகள் ஓய்விடங்கள் இந்த நெடுஞ்சாலை ஓரங்கள் மட்டுமே .பெரும்பாலான விபத்துகளுக்கு முதல் காரணமாக அமைவது இந்த சாலை ஓர வாகன நிறுத்தமும் ஓய்வும் தான்.
மத்திய அரசு எப்படி சாலையில் அங்கங்கே சுங்க கட்டணங்களை வசூலிப்பதற்கென்று சுங்க கட்டண மையங்களை நிறுவி வசூலிக்கிறதோ அதேபோல ஒவ்வொரு சுங்க கட்டணத்திற்கு வசூல் மையத்திற்கு அருகாமையிலும் வாகன நிறுத்தத்துடன் கூடிய குறைந்த விலையிலான உணவகங்கள் கழிவறை ஓய்வு உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகளை மத்திய தரைவழி சாலை போக்குவரத்து நெடுஞ்சாலை துறை மூலமாக மத்திய அரசு செய்து கொடுக்குமானால் சாமானிய மக்களுக்கும் சரக்கு போக்குவரத்தில் பிரயாணிக்கும் ஓட்டுநர்கள் உள்ளிட்ட பெரும்பாலானவர்களுக்கு குறைந்த விலையில் தரமான உணவு சுகாதாரமான கழிவறைகள் பாதுகாப்பான ஓய்விடங்கள் கிடைக்கும். அந்த வகையில் அவர்கள் குறைந்த கட்டணத்தில் நிம்மதியான பாதுகாப்பான தொலைதூர பிரயாணத்தை அனுபவிக்க முடியும். அது எதிர்காலத்தில் இது போன்ற பெரும் விபத்துக்கள் இழப்புக்கள் அசம்பாவிதங்களை தடுக்கும்.
மத்திய நெடுஞ்சாலை துறை மற்றும் சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் இதற்கான ஆய்வுகள் முயற்சிகளை முன்னெடுத்து நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் மக்களுக்கான அத்தியாவசிய தேவைகள் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை உறுதி செய்து கொடுக்கும் பட்சத்தில் எதிர்காலத்தில் இது போன்ற நெடுஞ்சாலை விபத்துகளையும் மக்களின் உயிரிழப்புக்களையும் பொருளாதார இழப்புக்களையும் தவிர்க்க முடியும் .