தமிழகத்திற்கு காவிரியில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடக்கோரி காவிரி நீர் மேலாண்மை ஆணையம், கர்நாடகாவிற்கு உத்தரவிட்டது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகத்தின் நூற்றுக்கும் மேற்பட்ட கன்னட சங்கத்தினர் முழு அடைப்பு போராட்டம் நடத்தினர். கர்நாடகாவில் ஓலா, டாக்சி என்று எந்த வாகனமும் ஓடவில்லை. அனைத்து நிறுவனங்களும், கடைகளும் மூடப்பட்டன. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பெங்களூருவில் இருந்து புறப்படக்கூடிய 40 விமானங்களையும் ரத்து செய்தது. மேலும் கர்நாடகா மக்களுக்கு ஆதரவு தெரிவித்து கன்னட நடிகர்கள் மற்றும் நடிகைகள் போராட்டத்தில் கலந்துக்கொண்டனர்.
ஒருபுறம் தண்ணீர் திறக்க மறுத்து போராட்டம் நடத்தி கொண்டிருக்க, மறுபுறம் தமிழ்நாட்டில் உள்ள நடிகர்கள் மற்றும் நடிகைகள் தமிழக விவசாயிக்கு ஆதரவு தராமல் கர்நாடகாவிற்கு எதிராக குரல் கொடுக்காமல் அவர்கள் படத்தை ரிலீஸ் செய்து கோடி கணக்கில் பணம் அள்ளும் நோக்கில் புரமோஷன் செய்து வருகிறார்கள். பணத்திற்காக திரையில் மட்டும் விவசாயிக்கும் விவசாயத்திற்கும் ஆதரவாக வாய்கிழிய பக்கம்பக்கமாக வசனங்கள் பேசிவிட்டு, உண்மையில் விவசாயிக்கும் விவசாயத்திற்கும் பிரச்சினை என்றால் நவதுவாரங்களையும் மூடிக்கொண்டு அவர்கள் வேலையை மட்டும் பார்த்து வருகின்றனர் என்று நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.