இஸ்ரேலில் நடந்து வருகின்ற போரை குறித்து முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளபக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் போர் என்பதே கொடூரமானது. அது எந்த நோக்கத்துக்காக யாரால் நடத்தப்பட்டாலும், அதில் முதல் பலியாவது அப்பாவி பொதுமக்கள்தான். கடந்த பத்து நாட்களாக #Gaza பகுதியில் நிகழும் போர், உலக மக்கள் அனைவரையும் பதைபதைக்க வைத்துள்ளது. உயிருக்குப் பயந்து இலட்சக்கணக்கான மக்கள் வெளியேறுவதும், மொத்தமாக அழிக்கப்பட்ட குடியிருப்புகளும், கடும் காயமடைந்த குழந்தைகளின் அழுகுரலும், குடிநீர் – உணவின்றித் தவிப்போரின் வேதனையும் இதயமுள்ளோர் அனைவரையும் கலங்க வைத்துள்ளன.
போரின்போது மருத்துவமனைகள் தாக்கப்படுதல் கூடாது என்பதையும் மீறி மருத்துவமனை தாக்கப்பட்டு நூற்றுக்கணக்கானவர் மரணம் அடைந்துள்ளார்கள். மனிதம் மரத்துப் போய்விட்டதா?
உலக சமுதாயம் இனியும் இதைக் கைகட்டி வேடிக்கை பார்க்கக் கூடாது.
ஐக்கிய நாடுகள் அவையும், அனைத்துலக நாடுகளும் ஓரணியாக நின்று இக்கொடும் போரை நிறுத்த வேண்டும். அப்பாவி பொதுமக்களின் உயிர்களைக் காக்க வேண்டும்.