ஆர்.எஸ்.எஸ். பேரணி – தமிழக அரசுக்கு அதிரடி உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் !

ஆர்.எஸ்.எஸ். பேரணி – தமிழக அரசுக்கு அதிரடி உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் !

Share it if you like it

எதிர்காலத்தில் ஆர்.எஸ்.எஸ். ‘அணிவகுப்பு ஊர்வலம்’ அனுமதிப்பது தொடர்பான ஒரு திட்டத்தை (முன் மொழிவை), நீதிமன்றம் தலையீடு இன்றி தயாரித்து தாக்கல் செய்ய, தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாட்டின் சுதந்திர தினம், விஜயதசமி நாட்களையொட்டி, தமிழகத்தில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர். எஸ். எஸ். அமைப்பு அனுமதி கோரி இருந்தது. அதற்கு தமிழக காவல் துறை மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ். சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பேரணிக்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. எனினும், ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த தமிழக அரசும்,
காவல் துறையும் அனுமதி வழங்கவில்லை. இதற்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நீதிமன்றத்தில்,
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், நீதிமன்றம் அனுமதி அளித்தும் காவல்துறை அனுமதி வழங்காதது, நீதிமன்ற உத்தரவை மீறும் செயல் எனக் கூறி கண்டித்ததுடன், தமிழக உள்துறை செயலாளர் அமுதா, டிஜிபி சங்கர் ஜிவால் உள்ளிட்டோருக்குநோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. உத்தரவை செயல்படுத்த தவறினால், நீதிமன்ற அவமதிப்பு தொடரப்படும் என்றும் எச்சரித்திருந்தது.

இதனிடையே ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி அளித்து, கடந்த மாதம் 16-ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயசந்திரன், 18-ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி இளங்கோவன் பிறப்பித்த உத்தரவுகளை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தது.

இந்த வழக்கு நவம்பர் முதல் வாரத்தில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசுக்கு சரமாரியான கேள்விகளை எழுப்பியதுடன், ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி வழங்க உத்தரவிட்டது. எனவே கடந்த 19-ம் தேதி பேரணிக்கு அனுமதி வழங்க தமிழக அரசும் ஒப்புக்கொண்டது. இதனை அடுத்து தமிழகம் முழுவதும் 53 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி, கடந்த 19 -ம் தேதி வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைக்க தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று முறையிடப்பட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள் சூர்யகாந்த், திபங்கர் தத்தா அடங்கிய அமர்வு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாங்கள் முடித்து வைக்க முடியாது என தெரிவித்ததுடன்,
தமிழக அரசுக்கு புதிய உத்தரவை பிறப்பித்தது. எதிர்காலத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணிகளுக்கு அனுமதிப்பது தொடர்பான ஒரு திட்டத்தை (முன் மொழிவை) நீதிமன்றம் தலையீடு இன்றி தயாரித்து தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் எதிர் கருத்துகள், பரிந்துரைகளை பெற்ற பின் உயர்நீதிமன்றம் முடிவு செய்யும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் இப்பிரச்சனைகள் தொடர்பாக ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை நீங்கள் அணுக கூடாது என்றும் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ள சூழலில் இது நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் செயல் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

தமிழக அரசு சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் கபில் சிபல் உயர்நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளுக்கு சட்டப்பூர்வமான தீர்வை காண உச்ச நீதிமன்றத்தை அணுகுவது என்பது, மாநில அரசின் உரிமை என தெரிவித்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், உயர் நீதிமன்ற நடவடிக்கைகளை சந்தேகத்துக்கு உட்படுத்தக்கூடிய காரணங்கள் எதுவும் இல்லை என்றும், இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் சட்டபூர்வமான தீர்வை அளிக்கும் என்று தெரிவித்தனர்.

ஆர்.எஸ். எஸ். அமைப்பின் பேரணிகளுக்கு அனுமதி வழங்குவதற்கான திட்டத்தை (முன் மொழிவை) உச்சநீதிமன்றத்திலேயே தாக்கல் செய்ய, தமிழகத்திற்காக வாதாடிய வழக்கறிஞர்கள்
கேட்டனர். ஆர்.எஸ்.எஸ். சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் குருகிருஷ்ண குமார் இதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்தார்.

இந்த நிலையில், தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், உயர்நீதிமன்றம் சிறந்த சட்ட விதிகளை உணர்ந்தும், அது தொடர்பாக ஆழமாக அறிந்தும் செயல்படுவதால், இந்த விவகாரத்தில் உரிய தீர்வை வழங்கும் என தெரிவித்தனர்.

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நிக்ழ்ச்சிகளை நடத்த திமுக அரசு தொடர்ந்து அனுமதி மறுத்து வந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு, ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு கிடைத்த வெற்றியாகவே கருதப்படுகிறது.


Share it if you like it