அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிக்கொண்டிரும்போது, மூதாட்டி ஒருவர் மேடைக்கே சென்று தனது ஆதங்கத்தை கண்ணீருடன் கொட்டித் தீர்த்ததால் அங்கிருந்த மீன்வளத்துறை அதிகாரிகள் வெலவெலத்துப் போய்விட்டார்கள். அம்மா இங்க வாங்கம்மாே எதுவாக இருந்தாலும் பேசிக்கொள்ளலாம் என நைஸாக ஒரு அதிகாரி அந்த மூதாட்டியை அலுவலகத்திற்குள் அழைத்தார்.
அதனை சட்டை செய்யாத அந்த மூதாட்டி தாம் கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டத்தை சேர்ந்தவர் என்றும் தனது மனு மீது ஒன்றே கால் ஆண்டாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் தனது மகனுக்கு தான் பாதிப்பு எனவும் கூறி கண்ணீருடன் மனக் குமுறலை கொட்டினார். அதிகாரிகள் தங்களை புத்திசாலிகளாக கருதி செய்தியாளர்கள் முன்னால் பேச வேண்டாம்மா இங்க வாங்க என அழைத்தனர். ஆனாலும் அந்த மூதாட்டி பிரஸ்மீட் நடைபெறும் இடத்தை விட்டு நகரவில்லை.
என்ன செய்வதென்றே தெரியவில்லை: இதனால் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. பிரஸ்மீட் கொடுக்கும் போதா இப்படி நடக்க வேண்டும் என நொந்துக் கொண்டவர் தனக்கு பக்கத்தில் நின்று கொண்டிருந்த மீன்வளத்துறை அதிகாரிகள் மீது பார்வையாலேயே கோபத்தை கக்கினார். பிறகு அமைச்சரே அந்த மூதாட்டியை அழைத்து என்ன பிரச்சனை எனக் கேட்டு அலுவலகத்தில் அமருங்கள் சரி செய்துகொடுக்கிறேன் என உறுதியளித்த பிறகே அவர் சென்றார்.