போன்சி என்ற பெயரில் நகை திட்டத்தை நடத்தி முதலீட்டாளர்களிடம் ₹ 100 கோடி மோசடி செய்ததாக பிரணவ் நகைக்கடை மீது குற்றச்சாட்டு பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அந்நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடர் என்பதால் விசாரணைக்கு ஆஜராகுமாறு பிரகாஷ்ராஜ்க்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
பழைய நகைகளை கொடுத்தால், ஒரு வருடம் கழித்து செய்கூலி, சேதாரமின்றி பழைய நகைகளின் எடைக்கு சமமாக புதிய நகைகளை பெறலாம் என்றும் விளம்பரம் செய்தது. இதனால் பெண்கள் மத்தியில் இந்த நிறுவனத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது.
இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் பிரணவ் ஜுவல்லரியின் பல்வேறு கிளைகளிலும் பணத்தை முதலீடு செய்தனர். மேலும் பழைய நகைகளை கொடுத்து, ஒரு வருடம் கழித்து புதிய நகைகளை வாங்கலாம் என்று ஆர்வமுடன் காத்திருந்தனர். ஆனால் பிரணவ் ஜுவல்லரி நிறுவனம், தனது நகைக்கடைகளை அடுத்தடுத்து மூடியது. புகாரை அடுத்து, பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் கடையின் பூட்டை உடைத்து ஆய்வு மேற்கொண்டபோது, நகைக்கடையில் ஒரு நகையும் இல்லாமல் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
தமிழகத்தில் திருச்சி, மதுரை, கும்பகோணம், சென்னை, நாகர்கோவில், கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் பிரணவ் ஜூவல்லரி என்கிற நகைக்கடை இயங்கி வந்தது. வாடிக்கையாளர்களிடம் இருந்து ஏராளமான தங்கம் மற்றும் பணத்தை முதலீடு பெற்று மோசடி செய்ததாக எழுந்த புகார்களை தொடர்ந்து பிரணவ் ஜுவல்லரி மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.