சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே பள்ளிக் கட்டிடம் ஒழுகும் நிலையில் மாணவர்கள் தலையில் சாப்பாடு தட்டுகளை கவிழ்த்த படியும், குடை பிடித்தபடியும் கல்வி கற்றனர். மேலச்சேத்தூரில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி 70 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. இங்கு 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். ஓட்டு கட்டிடத்தில் இயங்கி வந்த இப்பள்ளிக்கு 2005-ம் ஆண்டு அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. தரமில்லாமல் கட்டப்பட்டதால், அக்கட்டிடம் முழுமையாகச் சேதமடைந்தது.
இதையடுத்து மீண்டும் பழைய கட்டிடத்துக்கே பள்ளி மாறியது. அக்கட்டிடம் கட்டி பல ஆண்டுகளானதால் மேற்கூரை ஓடுகள் சேதமடைந்துள்ளன. கடந்த சில தினங்களாகப் பெய்து வரும் மழையால் மாணவர்கள் சிரமமடைந்து வந்தனர். இது குறித்து பெற்றோர் புகார் தெரிவித்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பள்ளியைப் பார்வையிட்டனர்.
இருப்பினும் மாற்று ஏற்பாடு செய்து கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. நேற்று பெய்த மழையிலும் மாணவர்கள் குடை, தட்டுகளைப் பிடித்துக் கொண்டு பாடத்தைக் கவனித்தனர். தற்காலிகமாக மாணவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யவும், நிரந்தரமாகப் புதிய கட்டிடம் கட்ட வேண்டுமெனவும் பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.