தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சிவபுரம் இந்துக்கள் சிவ குருநாதசாமி கோவிலில் உள்ள ஐம்பொன் நடராஜர் திருமேனியை தமிழக அரசிடம் இருந்து தங்களது கோயிலுக்கு கொண்டு வர பெரும் சட்டப் போராட்டம் நடத்தினர்.
பழமையான இந்த திருமேனியை 1982 ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து மீட்டுக் கொண்டு வந்து உலோகத் திருமேனி பாதுகாப்பு மையத்தில் தமிழக அரசு வைத்திருந்தது. அதனை வழிபாட்டுக்கு கொண்டு வர நீதிமன்றம் மூலம் பொதுமக்கள் தீர்வு அடைந்தனர்.
பலத்த பாதுகாப்புடன் சிவபுரம் வந்த நடராஜர் திருமேனியை வரவேற்பதற்காக ஊர் மக்கள் பெருந்திரளாக காத்திருந்து வரவேற்று ஊர்வலமாக கொண்டு சென்றது பரவச நிலையை ஏற்படுத்தியது.
இது போன்று இந்துக்கள் தெய்வத்தைக் காக்க போராடுவது அவசியமாகும். சிவபுரம் இந்துக்களை இந்து முன்னணி பாராட்டுகிறது.
அதேபோல் திருடப்பட்ட திருமேனிகளை அந்தந்த கோவிலில் தமிழக அரசு ஒப்படைப்பதில் என்ன சிக்கல் உள்ளது என்று அந்த ஆண்டவனுக்கு தான் வெளிச்சம். திருவாரூர் உலோக திருமேனி பாதுகாப்பு மையத்தில் உள்ள அத்தனை சாமி திருமேனிகளையும் வழிபாட்டுக்கு கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்துகிறது.