ராமர் கோயில் கட்டுமானத்தை தங்களின் முதன்மையான இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறது மத்தியில் ஆளும் பாஜக அரசு. இதன் கட்டுமானப் பணிகளுக்கு 2020 ஆகஸ்ட் 5ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. பிரதமர் மோடி நேரில் சென்று கட்டுமானத்தை தொடங்கி வைத்தார். இந்த விழா மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. இதையடுத்து பல்வேறு தரப்பினரும் நன்கொடையை வாரி வழங்கியுள்ளனர். நாட்டின் புனித நகரங்களில் இருந்து தண்ணீரும், கற்களும் கொண்டு வரப்பட்டன.
மூன்று ஆண்டுகளை கடந்த நிலையில் பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. அடுத்த ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் ஒருபுறம் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன. கும்பாபிஷேக விழாவில் பல லட்சம் பேர் கலந்து கொள்வர்.
இவர்கள் வருகையை ஒட்டி பேருந்து நிலையம், ரயில் நிலையம் ஆகியவை மறுசீரமைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக ராமர் கோயில் போன்ற வடிவமையில் ரயில் நிலையம் மாற்றப்பட்டு வருகிறது. இதற்காக இந்திய ரயில்வே 241 கோடி ரூபாய் மதிப்பில் முதல்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் ராமர் கோயில் திறப்பு விழா அன்று மகா தீபம் ஏற்றுவதற்கு ஜோத்பூரில் இருந்து நெய் அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதாவது, 108 கலசங்களில் 600 கிலோ நெய் அனுப்பி வைக்கப்பட உள்ளது. இதற்காக பிரத்யேக வடிவமைக்கப்பட்ட 11 சாரட் வண்டிகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இவை கடந்த 6 மாதங்களாக தயாரிக்கப்பட்டு வந்தது கவனிக்கத்தக்கது. இதில் கொண்டு செல்லப்படும் 600 கிலோ நெய்யானது பிரத்யேகமான முறையில் தயாரிக்கப்பட்டு வருகிறது.