சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் பயன் சமுதாயத்தை ஒட்டுமொத்தமாக உயர்த்துவதாக இருக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அகில பாரத பிரசார் பிரமுக் (அனைத்து இந்திய செய்தி தொடர்பாளர்) – திரு.சுனில் அம்பேகர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தி அறிவிப்பில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது :-
சமுதாய நல்லிணக்கம், சமூகநீதி, அனைத்து வகைகளிலும் பாகுபாடற்ற தன்மை, சமத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் ஹிந்து சமுதாயத்தை மேம்படுத்த, ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் (ஆர்எஸ்எஸ்) தொடர்ந்து பணியாற்றி வருகிறது.
பல்வேறு வரலாற்றுக் காரணங்களால் நமது சமுதாயத்தில் பல பிரிவினர் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும், கல்வியிலும் பின்தங்கி உள்ளனர் என்பது உண்மையே.
அவர்களை மேம்படுத்த, அவர்களுக்கு அதிகாரமளிக்க, பின்தங்கிய சமுதாய மக்கள் வளர்ச்சி பெற, பல்வேறு அரசுகள் பலவிதமான நலத்திட்டங்களையும் வசதி வாய்ப்புகளையும் காலத்திற்கேற்ற வகையில் செய்து வருகின்றன. அவற்றை ஆர்.எஸ்.எஸ். மனப்பூர்வமாக ஆதரிக்கிறது.
அதேசமயம், ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்து தற்போது மீண்டும் விவாதங்கள் எழுந்து வருகின்றன.
ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் பயன் சமுதாயத்தை ஒட்டுமொத்தமாக உயர்த்துவதாக இருக்க வேண்டும் என்பதும், இதனை மேற்கொள்ளும் போது எக்காரணம் கொண்டும் சமுதாய நல்லிணக்கமும் ஒற்றுமையும் குலையாமல் அனைத்துத் தரப்பினரும் உறுதிப்படுத்த வேண்டும் என்பதும் தான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கருத்து.
,