திருநெல்வேலி மாநகராட்சி தி.மு.க. மேயர் சரவணன் மீது திமுக கவுன்சிலர்கள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் ஜன.12 ல் நிறைவேறுகிறது.
திருநெல்வேலி மாநகராட்சி தி.மு.க. மேயர் சரவணனுக்கும், அவரது கட்சியை சேர்ந்த கவுன்சிலர்களுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ள தி.மு.க., கவுன்சிலர்கள், மேயர் சரவணனை மாற்ற வேண்டும் என, போர்க்கொடி துாக்கினர். இதுதொடர்பாக, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேருவை சந்தித்து, மேயர் சரவணன் மீது புகார் மனுக்கள் கொடுத்தனர். அதைத் தொடர்ந்து, ஆளுங்கட்சியை சேர்ந்த, 38 கவுன்சிலர்கள் கையெழுத்திட்டு, டிசம்பர் 6ல் மாநகராட்சி கமிஷனர் தாக்ரேவிடம் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை வழங்கினர். இதையடுத்து, மேயர் மாற்றத்திற்கு தி.மு.க. தலைமை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்நிலையில், சரவணனுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் ஜனவரி 12ல் நிறைவேறுகிறது. இதற்காக மாநகராட்சி கூட்டத்தை கூட்ட கமிஷனர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். மாநகராட்சி மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுவது இதுவே முதன்முறையாகும்.