2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் இருந்து முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராஜா, கனிமொழி உள்ளிட்டோர் விடுதலையை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தொலைத்தொடர்பு அமைச்சராக ஆ.ராசா பதவி வகித்தார். அப்போது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதன் மூலம் அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்படுத்தியதாக ஆ.ராசா மீது மத்திய கணக்கு தணிக்கை குழு குற்றம்சாட்டியிருந்தது. இந்த வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்நிலையில்,கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதி ஆ.ராசா,கனிமொழி உள்ளிட்டோர் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.
இதனையடுத்து கடந்த 2018ஆம் ஆண்டு சிபிஐ டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாக அறிவித்த நீதிபதி தினேஷ் குமார் சர்மா, மே மாதம் விசாரணைக்கு பட்டியலிடவும் உத்தரவிட்டார்.
2ஜி வழக்கில் ஜாபர் சேட் உள்ளிட்டோருடன் ஆ.ராசா,பேசியது தொடர்பான ஆடியோவை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து வெளியிட்டு வரும் நிலையில், மேல்முறையீட்டு மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.