ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியில் சேர்ந்தவர் அசோக்குமார். இவர் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்நிலையில் ஈரோடு மாவட்டம் காலிங்கராயன்பாளையம் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் நடத்திவரும் சந்தோஷம் பிரானவ் ஹீலிங் அக்குபஞ்சர் சிகிச்சை மையத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக சந்தேகத்திற்கு உரிய வகையில் வெளிமாநிலங்களில் இருந்து லாரிகள் மூலமாக கொண்டு வரப்பட்ட மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக பொதுமக்கள் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அளித்த தகவலின் பெயரில் நேற்றைய தினம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ஆவணங்கள் ஏதும் இன்றி பதுக்கி வைத்திருந்த 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான 150 மூட்டை சேலைகளை கைப்பற்றினர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த வணிகவரித்துறை அதிகாரிகள் அக்குபஞ்சர் மைய உரிமையாளர் ரவிச்சந்திரனிடம் நடத்திய விசாரணையில், அதிமுக வேட்பாளராக போட்டியிடும் ஆற்றல் அசோக்குமார் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான சேலைகளை தேர்தல் விதிகளை மீறி பதுக்கி வைத்திருந்தது அம்பலமாகியது.
இந்நிலையில் அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் மற்றும் அவரது நண்பர் யுவராஜ் மற்றும் அக்குபஞ்சர் சிகிச்சை மைய உரிமையாளர் ரவிச்சந்திரன் ஆகிய மூன்று பேர் மீது தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்தல் களம் சூடு பிடித்து வரும் நிலையில் அதிமுக வேட்பாளர் வாக்காளர்கள் கொடுப்பதற்காக 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான புடவைகளை கைப்பற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோட்டில் அ.தி.மு.க சார்பில் களமிறங்கியுள்ள ஆற்றல் அசோக்குமார் தனது வேட்புமனுத் தாக்கலில் மொத்த சொத்தின் மதிப்பு ரூ.583 கோடி எனக் குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.